முகக்கவசத்துடன் முதல் தீமிதித் திருவிழா

முகக்கவசத்துடன் முதல் தீமிதித் திருவிழா

3 mins read
553c6265-8e25-408f-82fc-7f2b24f54e1e
-
multi-img1 of 3

கி.ஜனார்த்­த­னன்

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­குப் பிறகு, பலத்த கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பொது­மக்­கள் முதன்­மு­த­லாக நேர­டி­யா­கக் கலந்­து­கொண்ட தீமி­தித் திரு­விழா நேற்று சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­தில் நடந்­தே­றி­யது. பக்­தர்­கள் முகக்­க­வ­சம் அணிந்து பூக்­கு­ழி­யில் இறங்­கி­ய­தும் தீமி­தித் திரு­நாள் வர­லாற்­றில் இதுவே முதன்­முறை.

கர­கம் கட்­டு­வ­தற்கு மூவர், எட்டு அடி அக­ல­மும் 18 அடி நீள­மும் கொண்ட பூக்­கு­ழி­யைத் தயார்ப்­ப­டுத்த 45 பேர், பாது­காப்பு, மருத்­து­வம், நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றுக்­காக 60 பேர் என மொத்­தம் 150 தொண்­டூ­ழி­யர்­கள் பங்­க­ளித்­தனர்.

கடந்த ஆண்­டில் பூக்­குழி ஆறு அடி அக­லம், 18 அடி நீளத்­தி­லும் அதற்கு முந்­திய ஆண்­டில் 10 அடி அக­லம், 18 அடி நீளத்­தி­லும் அமைக்­கப்­பட்­டது என்­றும் கோயி­லின் செய­லா­ளர் கதி­ரே­சன் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

பூக்­குழி இறங்­கும் நாளான நேற்­றுக் காலை­யில் படு­க­ளம் என்ற சடங்கு இடம்­பெற்­றது. அதன்­பின், பூக்­கு­ழியை அமைக்க கிட்­டத்­தட்ட எட்டு மணி நேரம் ஆனது.

சென்ற ஆண்­டைப் போலவே இம்­மு­றை­யும் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயிலில் இ­ருந்து புறப்­பட்டு ஸ்ரீ மாரி­யம்­மன் கோவிலை வந்­த­டை­யும் பக்­தர்­கள் ஊர்­வ­லம் இடம்­பெ­ற­வில்லை.

இவ்­வாண்­டின் பங்­கேற்­பா­ளர்­கள் பகோடா ஸ்தி­ரீட்­டில் பதிவு செய்து, அங்­கி­ருந்து 20 மீட்­டர் நடந்து சென்­ற­னர்.

ஆல­யத்­தின் தலை­மைப் பண்­டா­ரம் 37 வயது திரு வேணு­கோபால் திரு­நா­வுக்­க­ரசு மாலை 4.50 மணிக்­குக் கர­கத்­தைச் சுமந்து­கொண்டு, கோயிலில் இருந்து வெளியே வந்தார். பின்­னர் மாலை 5 மணி­ய­ள­வில் முத­லா­வதா­க அவர் பூக்­கு­ழி­யில் இறங்கி, நிகழ்­வைத் தொடங்கி வைத்­தார்.

இம்முறை பூக்குழி இறங்க 950 பேர் பதிவுசெய்து இருந்தனர்.

கோவில் நிர்­வா­கத் தலை­வர் சீ.லெச்­சு­ம­ணன் கூறு­கை­யில், "சென்ற ஆண்டு தீமிதி விழா­வில் கலந்­து­கொள்ள முடி­ய­வில்­லையே என்று பக்­தர்­கள் ஏங்­கி­னர். கோயில் நிர்­வா­கத்­தி­ன­ரான எங்­க­ளுக்­கும் பொது­மக்­கள் இல்­லா­மல் நடத்­து­கி­றோமே என்ற ஆதங்­கம் இருந்­தது. இவ்­வாண்டு அந்­தக் குறை தீர்ந்­தது," என்­றார்.

வழக்­க­மாக தீமி­தி­யில் கலந்­து­கொள்­வோ­ரில் 40 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருப்­பர் என்ற திரு லெச்­சு­ம­ணன், இவ்­வாண்டு பூக்­குழி இறங்க பதி­வு­செய்த 950 பேரில் 85 விழுக்­காட்­டி­னர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள், 15 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­டி­னர் என்­றார்.

இன்­னும் அதி­க­மா­னோர் கலந்து­கொள்­வ­தற்கு அனு­ம­தி­பெற தாங்­கள் முயன்­ற­போ­தும் அது முடி­யா­மல் போனது என்­றும் அடுத்த ஆண்­டே­னும் மக்­கள் முழு எண்­ணிக்­கை­யில் கலந்­து­கொள்­ளும் வகை­யில் சூழல் மேம்­பட வேண்­டும் என்­பதே தங்­க­ளின் வேண்­டு­தல் என்­றும் அவர் சொன்­னார்.

"இம்­முறை தீமி­தித் திரு­வி­ழா­வில் பொது­மக்­களும் பங்­கேற்க முடிந்­த­தில் எங்­க­ளுக்கு மகிழ்ச்சி. விழா­வில் கலந்­து­கொள்ள முடி­யா­மல் போன­தில் சில­ருக்கு வருத்­தம் இருக்­க­லாம். எங்­க­ளால் முடிந்­த­வரை அதி­க­மா­னோ­ரைச் சேர்க்க முயன்­றோம். பொது­மக்­கள் மிக­வும் ஒத்­து­ழைத்­த­னர். வந்­த­வர்­க­ளின் மன நிறை­வை­யும் மகிழ்ச்­சி­யை­யும் உணர முடிந்­தது," என்­றார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரியான த.ராஜ­சே­கர்.

இந்த ஆண்­டின் கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு­களை புதிய இயல்­பு­நி­லை­யின் ஒரு பகு­தி­யா­கவே பக்­தர்­கள் காண்­கின்­ற­னர். பூக்­குழி இறங்க நேர­டி­யா­கப் பதி­வு­செய்ய இய­லாத சூழ­லில், இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இணை­யத்­த­ளம் வாயி­லாக பக்­தர்­கள் பலர் பதி­வு­செய்­தனர்.

முன்­ன­தா­க­வும் விரைந்­தும் பலர் பூக்­குழி இறங்­கி­விட்­ட­தால், பின்­னர் நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தோர் ஒரு மணி நேரம் முன்­ன­தா­கவே வரும்­படி குறுஞ்­செய்­தி­மூ­லம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

பூக்­குழி இறங்­கும் நிகழ்வு முடிந்­த­பின் பெண் பக்­தர்­கள் பூக்­கு­ழியை வலம் வந்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான திரு­வாட்டி குக­னேஸ்­வரி தமிழ்ச்­செல்­வம், "இவ்­வாண்டு இணை­யத்­த­ளம் வழி­யாக முன்­ப­திவு செய்து, பின்­னர் கியூ­ஆர் குறி­யீட்டை வருடி பொருள்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்கும்படி கொடுக்­கும் முறை பிடித்­துள்­ளது.

"முன்­ன­தாக, சொந்த உடை­மை­க­ளைப் பாது­காப்­ப­தற்கு ஒரு­வரைத் துணைக்கு அழைத்­து­வர வேண்­டி­யி­ருந்­தது. கால்­க­டுக்­கக் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ரா­மல், கும்­பி­டு­தண்­டம் விரை­வாக முடிந்­தது," என்­றார்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அனைத்­தை­யும் கச்­சி­த­மாக ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தா­கக் கூறிய திரு­வாட்டி கவிதா ஜாய், 38, கும்பிடு­தண்­டத்தை நிறை­வேற்­றக் கிடைத்த வாய்ப்பை அம்­ம­னின் அரு­ளா­கவே கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இம்­மு­றை­யும் பொது­மக்­கள் நேரில் பூக்­குழி இறங்­கும் நிகழ்­வைக் காண அனு­ம­தி­யில்லை.

ஆயி­னும், கோயி­லுக்கு வெளியே சாலை­யின் மறு­பு­றம் போடப்­பட்­டு இருந்த தடுப்­பு­க­ளுக்­குப் பின்­னால் நின்­ற­படி, நூற்­றுக்­க­ணக்­கான பக்­தர்­கள் அம்­மனை வேண்டி, நிகழ்­வில் பங்­கு­கொண்­ட­னர்.

ஆனா­லும், யூடி­யூப், ஃபேஸ்புக் தளங்­களில் நேர­லை­யாக ஒளி­பரப்­பப்­பட்ட இந்­நி­கழ்­வைப் பல்­லா­யி­ரம் பேர் கண்டு, அம்­ம­னின் அருளை வேண்­டி­னர்.