சிங்கப்பூரில் வரும் 2023ஆம் ஆண்டு உணவகங்கள், உணவுக்கடைகள் போன்ற உணவு நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பற்றி இன்னும் அதிக உறுதி அளிப்பது அதன் நோக்கம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று கூறியது.
உரிமம் பெறும் புதிய விதி முறைகளின் கீழ், உணவு நிறு வனங்கள் கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த விதம் ஆராயப்படும்.
அதாவது அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு உணவுப் பாதுகாப்பில் தவறுகள் செய்துள்ளார்களா என்று விதிமுறைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
அத்துடன் உணவு சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரிகளை நிறுவனம் நியமித்ததா என்றும் கவனிக்கப்படும்.
வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று புதிய உணவு நிறுவனங்களுக்கான பாதுகாப்பு உறுதி நடைமுறை நடப்புக்கு வரும். அதில் சுமார் 23,000 நிறு வனங்கள் இடம்பெறும் என்று அமைப்பு கூறியது.
உணவுக்கடைகள், உணவகங்கள், 'கேட்டரிங்' நிறுவனங்கள், 'பேக்கரி' கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனவங்கள் போன்றவை உணவு நிறுவனங்களாகக் கருதப் படுகின்றன.
தற்போது அவற்றின் வளாகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவற்றின்படி, உணவு நிறுவனங்கள் ஏ, பி, சி என்ற தரநிலைகளைப் பெறுகின்றன.
ஆனால் புதிய நடைமுறையின் கீழ், இந்த தரவரிசை மாற்றப்படும். உணவு நிறுவனங்களுக்கு வெண் கலம், வெள்ளி, தங்க விருதுகள் வழங்கப்படும். அந்த விருதுகளுக்கு ஏற்ப மூன்று அல்லது ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும்.
விருதின் தரத்துக்கு ஏற்ப, உரிமத்துக்கான காலம் கூடும். நிறு வனம், கடையா, உணவகமா, அல்லது உணவுத் தயாரிப்பு நிறுவனமா என்பதற்கு ஏற்ப விருதுக்கான தகுதி நிபந்தனைகள் மாறும்.
தற்போது தரவரிசை அளிக்கும் நடைமுறை, அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஓர் உணவு நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றின் தரத்தைக் கண்டறிகிறது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி டான் லீ கிம் தெரிவித்தார்.
ஒப்புநோக்க புதிய நடைமுறை உணவகங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்றார் அவர்.
"உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுவனங்கள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை இந்தப் புதிய நடைமுறை இன்னும் தெளிவாகக் காட்டும். அதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் விவரமறிந்து தெரிவுகளைச் செய்யலாம் என்று திரு டான் கூறினார்.

