தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) கல்லூரி கிழக்கில் பயின்ற மாணவர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு ரொட்டி வெட்டும் கத்தியை எடுத்துச் சென்றார். பின்னர் அவரது நண்பர் பள்ளி வளாகத்தில் அக்கத்தியைப் பயன்படுத்தி வேறொரு மாணவரைக் குத்தினார்.
ரொட்டி வெட்டும் கத்தியை எடுத்துச் சென்ற 18 வயது இளையர் தமது நண்பருக்கு உதவியதை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார்.
இரண்டு இளையர்கள் தற்போது ஐடிஇயில் படிக்கவில்லை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. தாக்குதலை நடத்திய 19 வயது இளையரான பழனிதாஸ் ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை இன்னும் நடைபெறவில்லை.
தாக்குதலுக்கு உதவிய 18 வயது இளையர், இதனுடன் தொடர்பில்லாத வேறு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேசன் டான் என்பவரிடமிருந்து $20,000 ரொக்கத்தைத் திருடும் முயற்சியில் அவர் கூட்டாகப் பங்கெடுத்தார்.
அச்சம்பவத்தின்போது அவருக்கு 17 வயது என்பதால் குழந்தைகள், இளையர் சட்டத்தின் கீழ் அவரது அடையாளத்தை வெளியிட முடியாது.
சென்ற பிப்ரவரி 15ஆம் தேதி 18 வயது இளையரை பழனிதாஸ் தொடர்புகொண்டார். தம் நண் பருக்கு 'பிரச்சினை' இருந்ததால் பள்ளிக்கு ரொட்டி வெட்டும் கத்தியை எடுத்து வரும்படி அவர் இளையரிடம் கூறினார்.
பழனிதாஸ் பின்னர் தாம் குறிவைத்த இளையரிடம், பள்ளிக் கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்துக்கு வரச்சொன்னார். கத்தியைப் பயன்படுத்தி, அங்கு வந்திருந்த இளையரைப் பலமுறை தாக்கினார்.
இளையருக்கு இடது தோள் பட்டையிலும் இடது காதிலும் காயங்கள் ஏற்பட்டன.

