எல்எஸ்டி போதை மருந்து கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட காலத்தில் உயிரிழந்த 17 வயது இளையர் ஜஸ்டின் லீ, போதை மருந்து குற்றங்களின் தொடர்பில் பிடிபட்டிருக்கும் ஐந்தாவது நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர் ஆவார்.
மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சென்ற பிப்ரவரி 3ஆம் தேதி, இளையரான ஜஸ்டின் லீயைக் கைதுசெய்தனர். 131 எல்எஸ்டி அஞ்சல் அட்டைகளைக் கடத்தியதன் தொடர்பில் அவர் மீது ஜூன் 24ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
செப்டம்பர் 24ஆம் தேதி உயரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ஜஸ்டின் உயிரிழந்தார்.
அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் அவர் நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரியிலிருந்து விலகினார். அவர் மீண்டும் சாதாரண நிலைத் தேர்வை எழுதத் திட்டமிட்டதாக அவரது தாயார் திருவாட்டி சிசிலியா ஆவ் கூறினார்.
கடந்தாண்டு நவம்பரில், எல்எஸ்டி போதை மருந்தை விற்றதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரியில் படித்த சாஹில் மஹேஷ் தடானிக்கு சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது. அவர் மூன்று சக மாணவர்களுக்கு போதை மருந்தை அளித்தார் அல்லது விற்றார்.
அந்தத் தனித்தனிச் சம்பவங்கள் பற்றி அறிந்துள்ளதாக நன்யாங் பலதுறைத் தொழில்கல்லூரி நேற்று முன்தினம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
சாஹிலைப் பொருத்தவரை, தனது மாணவர் நன்னடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதன் தொடர்பில் விசாரனை நடத்தியதாக கல்லூரி சொன்னது. நான்கு மாணவர்களும் தண்டனையை முடித்துவிட்டார்கள் என்றும் தன் மாணவர்கள் எல்லா நேரத்திலும் சட்டப்படி நடப்பர் என்று எதிர்பார்ப்பதாகவும் அது கூறியது.

