இழுவை லாரியும் கார் ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக தீவு விரைவுச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகலில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கின.
சம்பவ இடத்தைக் கடக்கும் வரை அந்த வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதை இணையத்தில் பதிவேற்றப்பட்ட கண்காணிப்புப் படக்கருவியின் காட்சியில் காணமுடிந்தது.
துவாசை நோக்கிய தாம்சன் ரோடு வெளிவழி அருகே நேற்று முற்பகல் 11.03 மணிக்கு விபத்து குறித்து தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக போலிசார் கூறினர்.
இவ்விபத்தில் யாரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விரைவுச்சாலையின் மூன்று வழித்தடங்களின் குறுக்கே வழியை அடைத்துக்கொண்டு நின்ற லாரியின் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நின்றிருப்பதை அந்தப் படம் காட்டியது.
அந்த இடத்தைக் கடக்க வாகனமோட்டிகள் முதல் தடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டி இருந்தது. போக்குவரத்து நிலைகுத்தியதால் செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளி அருகே தீவு விரைவுச்சாலையின் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, விபத்து குறித்து 11.20 மணியளவில் தகவல் கிடைத்தபோதும் உதவி கோரப்படவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.