ஈராண்டுகளுக்குமுன் நிகழ்ந்த முறைத்துப் பார்க்கும் சம்பவம் தொடர்பில் பதின்ம வயதுச் சிறுவனை அவமானப்படுத்தியது தொடர்பாக ஆடவர் ஒருவர்க்கு இன்று செவ்வாய்க்கிழமை மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
துன்புறுத்தல், வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக முகம்மது நூர் ஃபரிஸ்வான் ரிஸ்வான், 27, என்ற அந்த ஆடவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
2019 மார்ச் 12ல் சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவனின் வயது 17. பதின்ம வயதினர் என்பதால் அவரைப் பற்றிய விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.
முறைத்துப் பார்த்ததற்குத் தண்டனையாக மூன்று இளையர்கள் ஒன்றுகூடி அச்சிறுவனுக்கு இரண்டு தெரிவுகளைக் கூறினர். அடிவாங்குவது அல்லது ஆடைகளைக் களைவது. அடி வாங்குவதைத் தவிர்க்க ஆடை களைய அச்சிறுவன் இணங்கினார்.
அது வாட்ஸ்அப் குழு ஒன்றில் பகிரப்பட்டு, பின்னர் சமூக ஊடகங்களில் பரவியது. ஆடையின்றிப் பிறந்த மேனியாக இருந்ததும் அதனைத் தம் பள்ளித்தோழர்கள் பலர் பார்த்ததும் சிறுவனுக்குப் பெருத்த அவமானத்தை அளித்தது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய டேனியல் முகம்மது யாஷிம், 23, என்பவருக்கு இவ்வாண்டு செப்டம்பர் 16ஆம் தேதி 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

