சிங்கப்பூரில் உள்ள சில தாதிமை இல்லங்களில் கொவிட்-19 குழுமங்கள் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, தாதிமை இல்லங்களில் தங்கும் மூத்தோரைப் பாதுகாக்க அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் தாதிமை இல்லங்களுக்குச் சேவைகள் வழங்குவோருக்கும் தாதிமை இல்லங்களுக்குச் செல்லும் விருந்தினர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தாதிமை இல்லங்களுக்கு விருந்தினர்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதைக் காட்டிலும் அவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்றார் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம்.
"தகுதி பெறும் தாதிமை இல்ல ஊழியர்கள், சேவைகள் வழங்குவோர், விருந்தினர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி (பூஸ்டர் தடுப்பூசி உட்பட) கட்டாயமாக்கப்பட வேண்டும். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பது ஒவ்வொரு
வரின் கடமை. அதை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் மட்டுமே விட்டுவிடக்கூடாது," என்றார்
டாக்டர் லியோங்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாததற்கு மருத்துவக் காரணம் உள்ளவர்களைத் தவிர்த்து மற்ற இல்லவாசிகள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று டாக்டர் லியோங் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்
கொள்ளத் தகுதி பெறுவதை அவர் சுட்டினார்.
கடந்த மாதம் 13ஆம் தேதியன்று தாதிமை இல்லங்களுக்கு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலை இரண்டாவது முறையாக அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு கடந்த
வியாழக்கிழமையன்று அறிவித்தது.
சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், தாதிமை இல்லங்களில் தங்கும் மூத்தோரைப் பாதுகாக்க இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தாதிமை இல்ல ஊழியர்களுக்கும் அங்கு செல்பவர்களுக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது நன்மை பயக்கும் என்றபோதிலும் இல்லவாசிகளுக்கும் அதைக்
கட்டாயமாக்குவதில் சிக்கல் இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.
"இல்லவாசிகள் சிலர் மிகவும் பலவீனமாக இருக்கக்கூடும். அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து முடிவு எடுக்கும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு இருக்க வேண்டும். இல்லவாசிகளைப் பாதுகாப்பதே பிரதான நோக்கமாகும். எனவே, தாதிமை இல்ல ஊழியர்கள், அங்கு சேவைகள் வழங்குவோர், விருந்தினர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி கட்டாயமாக்குவது சரியான முடிவாகும்," என்றார் பேராசிரியர் டியோ.
தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாமல் இருந்தாலும் அதை இல்லவாசிகள்
போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் ஊக்குவித்தார்.

