பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஏற்றம்
சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. எஸ்ஸோ பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகள் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டன.
இதற்கு முன்பு எஸ்பிசி, ஷெல், கால்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களும் கடந்த வியாழக்கிழமையன்று அவற்றின் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தின. சினோபெக் அதன் பெட்ரோல், டீசல் விலைகளைக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயர்த்தின.
இந்தத் தகவல்கள் சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் நிலைய விலைகள் கண்காணிப்புத் தளம் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு லிட்டருக்கு நான்கிலிருந்து ஐந்து காசாக விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆக அண்மைய மாற்றங்களுக்குப் பிறகு, எஸ்பிசி பெட்ரோல் நிலையங்களின் பெட்ரோல், டீசல் விலைகள்தான் தள்ளுபடிக்கு முன்பு ஆகக் குறைவானவை. அதன் 92 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு $2.55. முன்பைவிட இது நான்கு காசு அதிகம்.
அதன் 95 ரக பெட்ரோலின் விலை ஐந்து காசு அதிகரித்து $2.58ஆக ஏற்றம் கண்டுள்ளது. எஸ்பிசியின் 98 ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு நான்கு காசு உயர்ந்து $3.06ஆக உள்ளது.
ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் விலை தொடர்ந்து ஆக அதிகமாக உள்ளது. அதன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு $2.65ஆக உயர்ந்துள்ளது. அதன் 98 ரக பெட்ரோல் லிட்டருக்கு $3.34ஆக உள்ளது.
ஷெல் நிறுவனத்தின் டீசல் விலை கால்டெக்ஸ் நிறுனத்தின் டீசல் விலையைப் போன்று லிட்டருக்கு $2.18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் மேலும்
14 பேர் மரணம்
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 14 பேர் மாண்டுவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. மாண்டவர்கள் 60 வயதுக்கும் 93 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்கள் அனைவரும் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதுதொடர்பாக அமைச்சு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு 329 பேர் மாண்டுவிட்டனர்.
நேற்று முன்தின நிலவரப்படி தொடர்ந்து 36 நாட்களாகக் கிருமித்தொற்று காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 3,174 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 2,843 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 322 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 457 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 175,818ஆக அதிகரித்துள்ளது.
261 பேருக்குக் கூடுதல் உயிர்வாயு தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் சாதாரண மருத்துவமனை அறைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
107 பேரின் உடல்நிலை சீரற்று இருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியது.
64 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனநலக் கழகத்தில்
கொவிட்-19 பாதிப்பு
மனநலக் கழகத்தில் மொத்தம் 116 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேலும் எட்டு பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் மனநலக் கழகத்தில் தங்கி சிகிச்சை பெறும் 108 நோயாளிகளும் எட்டு ஊழியர்களும் அடங்குவர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் புளோக் 4, 5, 6ஐ சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட அறைகளில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வீடு திரும்ப தகுதி பெறும் நோயாளிகளுக்குப் பரிசோதனை நடத்தி அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வீடு திரும்பலாம்.
மனநலக் கழகத்தின் மற்ற அறைகளும் மருத்துவச் சேவைகளை வழங்கும் வெளிநோயாளி நிபுணத்துவ மருந்தகங்கள் போன்ற இடங்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை.
அவை வழக்கம்போல் செயல்பட்டு வருவதாக மனநலக் கழகம் தெரிவித்தது.
மனநலக் கழகத்தில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கொவிட்-19 அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் அவர்களுக்குக் கிருமித்தொற்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

