வீட்டில் குணமடையும் ஏற்பாட்டுக்கு கூடுதல் வளங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கூடுதல் பலன்கள் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் நெருக்கடி உத்தி, செயல்பாட்டுக் குழுமத்தின் தலைவர் தினேஷ் வாசு டாஷ் கூறியுள்ளார்.
திட்டத்தில் உதவ இன்னும் அதிகமான சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதும் அதில் அடங்கும் என்று திரு தினேஷ் நேற்று தெரிவித்தார்.
இந்த ஆயுதப் படை வீரர்கள் வீட்டில் குணமடைந்து வருவோருக்கு உதவும் நட்பாளர்களாகச் சேவையாற்றுகின்றனர்.
இத்துடன், ஏற்பாட்டின் ஒரு பகுதியான தொலைதூர மருந்துச் சேவை வழங்கும் முறையை அதிகாரிகள் மேம்படுத்தியுள்ளனர்.
திட்டத்துக்கு உதவ மற்ற அரசாங்க அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று திரு தினேஷ் தெரிவித்தார்.
இதுபோன்ற முயற்சிகளால், பெறும் அழைப்புகளை இன்னும் சரியாகக் கையாள முடிவதாகவும் அதிகமான நோயாளிகளுக்கு தொலைதூர மருந்துச் சேவை துரிதமாகக் கிடைப்பதாகவும் அவர் சொன்னார்.
வீட்டில் குணமடையும் ஏற்பாடு தொடங்கப்பட்ட முதல் சில வாரங்களில் அது குறித்து பல புகார்கள் வந்தன. தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ற சரியான ஆலோ சனையைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சை அணுக முடியவில்லை என்றும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் பலர் அப்போது கூறினர்.
பல்வேறு தரப்புகளின் உதவி யுடன், வீட்டில் குணமடையும் ஏற்பாடு பற்றிய தொலைபேசி அழைப்புகளில் 95 விழுக்காட்டைக் குழுவால் கையாள முடிவதாக திரு தினேஷ் குறிப்பிட்டார்.
அத்துடன், வீட்டில் குணமடையக் கூடியவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் விவரங்களை இணையத்தில் சமர்ப்பித்த 24 மணி நேரத்துக்குள் தொடர்புகொள்ளப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
நோய் அறிகுறிகள் இல்லாத அல்லது இலேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு வீட்டில் குணம் அடையும் ஏற்பாடு பயன்படுத்தப்படுகிறது.

