தேசிய அளவிலான தடுப்பூசி திட்டம் இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி இங்குள்ள மருத்துவர்கள், சீன பாரம்பரிய மருத்துவர்கள், சமூக அமைப்புகள் போன்றவை மூத்தோருக்கு அறிவுறுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
பிடோக் நார்த் அவென்யூ 2இல் உள்ள சீ ஜிங் சீனப் பாரம்பரிய மருந்தகத்துக்குச் சென்று வருவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதியவர்கள் என்று அங்குள்ள மருத்துவர் திருவாட்டி ரேன் சியாவ் லிங் கூறினார். தமது நோயாளிகளில் குறைந்தது 50 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றார் அவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவு ஏற்படும், அதனால் குழந்தைகளுக்குப் பாரமாகிவிடுவோம் என்ற அச்சத்தில் பலர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில்லை என்றார் திருவாட்டி ரென்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் கடந்த ஜூலை மாதம் நடத்திய ஆய்வில் முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு இதுவே முதன்மை காரணம் என்று தெரியவந்தது.
அதே ஆய்வு, கொவிட்-19 பற்றிய செய்திகளை நம்பாத முதியவர்கள் தங்கள் குடும்பத்தாரை அதிகம் நம்புவதாகக் கூறியது.
குடும்பத்தார் பல நேரங்களில் இவர்களை வற்புறுத்துவதில்லை என்று கூறிய தாய் ஹுவா குவான் தொண்டமைப்பைச் சேர்ந்த ஆண்டி லீ, அமைப்பு நடத்தும் மூத்தோர் நடவடிக்கை நிலையங்களில் உள்ளோருக்கு ஆலோசனை வழங்கி வருவதாகச் சொன்னார்.

