ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் உள்ள கொவிட்-19 கிருமித் தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்த 15 பேரும் இல்லவாசிகள் என்று அது கூறியுள்ளது. வார்டுகளில் பணி புரியும் எந்த ஊழியருக்கும் கிருமி இதுவரை தொற்றவில்லை என்று அந்நிறுவனம் ஃபேஸ்புக்கில் நேற்றுக் காலை பதிவிட்டது.
தாதிமை இல்லத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டதாகவும் அது கூறியது.
எஞ்சியுள்ள 230 இல்லவாசி களுக்கும் கிருமிப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான கண்காணிப்புப் பரிசோதனைகளுக்கு அப்பாற்பட்டு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள என்டியுசி ஹெல்த் தாதிமை இல்லத்தில் உள்ள தொற்றுக் குழுமம் பற்றி தெரிவித்திருந்தது.
கிருமிப் பரவல் தொடங்கியதிலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக என்டியுசி ஹெல்த் கூறியது.
தொற்று பரவாமல் இருக்க, ஊழியர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப் படுகிறது. அதனுடன், இல்லம் கூடுதலாக சுத்தம் செய்யப்படு வதுடன், எல்லா குடியிருப்பாளர் களுக்கும் தினமும் இரண்டு முறை உடல்வெப்பச் சோதனைகள் செய்யப்படுகின்றன.
மேலும், ஊழியர்கள் தனிநபர் பாதுகாப்புக் கவச ஆடைகளை அணிவதுடன் வாரம் இரு முறை விரைவுக் கிருமிப் பரிசோதனை களைச் செய்துகொள்ள வேண்டும்.

