வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இவ்வாண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகளில் தமிழ் முரசும் பங்களிக்கிறது.
எழுத்தாளர் விழாவின் சில அமர்வுத் தலைப்புகள், பயிலரங்குக் கருப்பொருட்கள் ஆகியவற்றை முன்மொழிந்து நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவுடன் சேர்ந்து வழங்கவுள்ளது. அத்துடன் தமிழ் முரசின் ஆசிரியர்களும் செய்தியாளர்களும் அமர்வுகளில் பங்கு வகிக்கின்றனர்.
செய்திக் கட்டுரை, அபுனைவு, புனைவுக் கதைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பற்றி 'உண்மை பாதி கற்பனை பாதி: கட்டுரையும் புனைகதையும்' எனும் அமர்வு ஆராய்கிறது. தமிழ் முரசின் மூத்த துணை ஆசிரியர் எம்கே ருஷ்யேந்திரன், செய்தியாளர் இர்ஷாத் முகம்மது, போன்றோர் அமர்வுகளில் பேச்சாளர் களாகக் கலந்துகொள்கின்றனர்.
"எழுத்தாளர் விழாவில் நம் அன்றாட வேலையின் ஓர் அங்கம் பற்றிய நடைமுறைகள் பற்றி பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி பகிர்ந்துகொண்டு பலருக்கும் தெரியவைக்க இந்த அமர்வு மூலம் ஒரு வாய்ப்பு கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி," என்றார் இர்ஷாத். இவருடன், எழுத்தாளர்கள் அழகுநிலா, ஹேமலதா ஆகியோரும் அமர்வில் கலந்துகொள்கின்றனர்.
கூடா குறும்புகள்: தமிழ் இலக்கியத்தில் எல்லைகளும் மீறல்களும் என்ற தலைப்பிலான அமர்வை தமிழ் முரசு செய்தி ஆசிரியர் தமிழவேல் வழிநடத்துவார். இந்த அமர்வில் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் லீனா மணிமேகலை, உள்ளூர் நாடக ஆசிரியர் வடிவழகன் பிவிஎஸ்எஸ், எழுத்தாளர் இந்திரஜித் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மாடத்தி எனும் கவனிக்கப்பட்ட திரைப்படத்தை இயக்கிய லீனா, நாடகம், குறும்படங்களில் பங்கெடுப்பவர்களுக்காக குறும்படப் பயிலரங்கை வழிநடத்துவார். நவம்பர் 7, 13 ஆகிய தேதிகளில் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது.
பிரபல எழுத்தாளர் சு வேணுகோபால், ஒரு கதையைப் பற்றி மாற்றி சிந்திக்கும் எழுத்துப் பயிலரங்கை வழி நடத்துவார்.
தேக்காவின், உணவுத் தடங்கள், அவற்றின் கதைகளைக் கேட்டறியும் சுற்றுலாவை பிரௌன் வாய்சஸ் அமைப்பு படைக்கிறது. அதில் கிரேஸ் கலைச்செல்வி, கார்த்திகேயன் சோமசுந்தரம் போன்றோர் பங்கெடுக்கின்றனர்.
சிங்கப்பூர்-மலேசிய சஞ்சிகைகள் பற்றிய அமர்வு, குழந்தை களுக்கான கதை நேரம், மகாகவி பாரதியாரின் கவிதைகள் இடம்பெறும் பன்மொழிக் கவிதைகள் பற்றிய ஒப்பீடு போன்றவையும் இடம்பெறுகின்றன.
மேல்விவரங்களுக்கும் நுழைவுச் சீட்டுகளுக்கும்: www.singapore writersfestival.com

