கிரேஸ் ஃபூ: வெவ்வேறு இலக்குகளால் சிக்கல் ஏற்படலாம்
பருவநிலை மாற்றத்தால் பிரச்சினைகள் எழும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
இருப்பினும், வளர்ச்சி அடைந்த நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளதால் எதிர்வரும் ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தீர்வு காண முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று அமைச்சர் ஃபூ அக்கறை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாகத் தீர்வுகளைக் காண நாடுகளுக்கிடையே தொடர்ந்து பல தடைகள் இருப்பதாக அவர் கூறினார்.
வெள்ளம், உயரும் கடல் மட்டம் ஆகியவற்றைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு நிதி உதவி தேவைப்படும் என்றார் அவர்.
இவ்வாண்டுக்கான 'டென்டன்ஸ் ரோடைக்' கலந்துரையாடலில் அமைச்சர் ஃபூ கலந்துகொண்டு பேசியபோது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
இம்மாதம் 31ஆம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் எத்தகைய தீர்வுகள் காணப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஃபூவின் உரை அமைந்தது.
$1.89 மில்லியன் மோசடி:
பெண்ணுக்குச் சிறை
டிபிஎஸ் வங்கியிடமிருந்து $1.89 மில்லியனை ஏமாற்றிப் பறிக்க மோசடியில் ஈடுபட்டதை பெண் ஒருவர் ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரரான 28 வயது நூர் தஷா மாக் ஷாவுக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோசடி மூலம் $11,500 பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
டிபிஎஸ் 'கேஷ்ஆன்லைன்' மோசடியில் ஈடுபட்ட மற்ற ஐந்து பேருக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 15 பேர் தங்கள் தனிப்பட்ட விவரங்களையும் அடையாள ஆவணங்களின் பிரதிகளையும் பலரிடம் அனுப்பியதாக வர்த்தக விவகாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கடன் பெறும் நோக்கில் அவர்கள் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. போலி சம்பள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிடைத்த $11,500 தொகையிலிருந்து தரகுக் கட்டணமாக மொத்தம் $6,000ஐ மற்றவர்களுக்கு தஷா கொடுத்ததாக அறியப்படுகிறது.
தஷாவின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பம் போலியானது என்பதைக் கண்டுபிடித்த வங்கி, தவணை முறைப்படி கடனை அடைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டது.
ஆனால் கடனை அடைக்க தஷா தவறியதால் அவரது வங்கிக் கணக்கிலிருந்து டிபிஎஸ் வங்கி பணத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் வங்கியால் $150 மட்டுமே திரும்ப பெற முடிந்தது. எஞ்சிய தொகை மீட்கப்படவில்லை.
இடத்தைத் தக்கவைத்த என்யுஎஸ்; என்டியு பின்னுக்குத் தள்ளப்பட்டது
ஆக அண்மையில் வெளியிடப்பட்ட டைம்ஸ் உயர்கல்வி ஆய்வில், தலைசிறந்த உயர்கல்வி பட்டியலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) தொடர்ந்து 24வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டிலும் என்யுஎஸ் 24வது இடத்தை வகித்தது.
இதற்கிடையே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) பத்து இடங்கள் சரிந்து, பட்டியலின் 61வது இடத்திலிருந்து 70வது இடத்தை ஒன்பது உயர்கல்வி நிலையங்களுடன் பகிர்ந்துகொண்டது.
அந்த ஒன்பது உயர்கல்வி நிலையங்களில் சிட்னி பல்கலைக்கழகமும் மான்செஸ்டர் பல்கலைக்கழகமும் அடங்கும்.
இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 10,963 கல்விமான்கள் பங்கெடுத்தனர். இவ்வாண்டின் ஆய்வில் 202 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன.
பட்டியலின் முதலிடத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தக்கவைத்துக்கொண்டது. இரண்டாவது இடத்தை மேசசூசட்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் பிடித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்ட்ரஸெனக்கா மருந்தியல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு கொவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்துக்குப் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்ஹுவா பல்கலைக்கழகம் முதல்முறையாக பட்டியலின் பத்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பீகிங் பல்கலைக்கழகம் 15வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

