போலிப் பொருட்களை இணையத்தில் விற்பது தொடர்பாக போலிசார் மூன்று ஆடவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்கள் 30க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதினர். இவர்களில் ஒருவர் தொலைதூர சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக போலிசார் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
ஜாலான் சுல்தான், உட்லண்ட்ஸ் சர்கிள் மற்றும் பிடோக் ரெசர்வோர் ரோடு போன்ற பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை போலிசார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அப்போது கணினிகளையும், கைபேசிகள் ஆகியவற்றோடு 600க்கும் மேற்பட்ட போலி ஆடை
களையும் கைப்பைகளையும் மற்றும் சில பொருட்களையும் போலிஸ் அதிகாரிகள் அந்த இடங்களில் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் $170,000. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நீடிப்பதாக போலிசார் கூறியுள்ளனர்.
வணிக முத்திரைச் சட்டத்தின்கீழ் போலிப் பொருட்களை விற்பவர் அல்லது விநியோகிப்பவருக்கு $100,000 வரையிலான அபராதம் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனை போன்றவை விதிக்கப்படலாம்.
தொலைதூர சூதாட்டச் சட்டத்தின்கீழ் எவராவது சிங்கப்பூர் தொடர்பான சூதாட்டச் சேவைகளை வழங்கி குற்றமிழைத்தால் அவருக்கு $20,000க்கும் $500,000க்கும் இடைப்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். மேலும் அவரை ஏழாண்டு வரையில் சிறையில் அடைக்க சட்டத்தில் இடமுண்டு.

