சிங்கப்பூரின் பிரபல காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான 'என்டியுசி இன்கம்' அதன் சேவையை மூன்று நாடுகளுக்கு விரிவுபடுத்து கிறது.
இந்தோனீசியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளில் அது அடியெடுத்து வைக்கிறது. இதற்காக அந்நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் என்டியுசி இன்கம் கைகோத்து உள்ளது. மூன்று நாடுகளிலும் காப்புறுதியை ஒரு சேவையாக வழங்குவதே 'என்டியுசி இன்கம்'மின் நோக்கமாகும். அதாவது தேவையை அடிப்படை யாகக் கொண்டு வாடிக்கையாளர் களுக்கு எளிய வழியில் காப்புறுதி சேவை வழங்கப்படும்.
இந்தோனீசியாவின் பிடி சென்ட்ரல் ஏஷியா ஃபைனான்ஷியல் (ஜகாதிரி), வியட்னாமின் 'பிடிஐ' எனப்படும் போஸ்ட் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஜாய்ண்ட் ஸ்டாக் காப்புறுதி நிறுவனம், மலேசியாவின் விஷுர் டெக் ஆகிய நிறுவனங் களுடன் இணைந்து செயல்படுவோம் என்று நேற்று என்டியுசி இன்கம் தெரிவித்தது.
இம்மூன்று நிறுவனங்களும் என்டியுசி இன்கமின் 'டிராப்லெட்' எனும் மழைக்கால காப்பீட்டுத் திட்டத்தை ஜகார்த்தா, ஹனோய், ஹோ சி மின், கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தும். வாடகை கார் சேவை வழங்கும் 'கிராப்' போன்ற தளங் களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்தக் காப்புறுதி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது மழைக்காலத்தில் கட்டணம் அதிகரிக்கும்போது காப்புறுதி ஈடு செய்யும். ஜெர்மனியின் தரவு நிறுவனமான 'ஸ்டாடிஸ்டா' மேற்கொண்ட ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டிய என்டியுசி இன்கம், 2020ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாடகைக் கார் பயனீட்டாளர்களின் சந்தை மதிப்பு 11 பில்லியன் யுஎஸ் டாலர் (14.82 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதில் இந்தோனீசியா மட்டும் 6.73 பில்லியன் வெள்ளியுடன் முன்னணி வகிக்கிறது. இதற்கு அடுத்தடுத்த நிலையில் சிங்கப்பூர் (S$2.69 பில்லியன்), வியட்னாம் (S$2.16 பில்லியன்), மலேசியா (S$1.48 பில்லியன்) ஆகிய நாடுகள் ஜெர்மனியின் ஆய்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

