சிங்கப்பூரில் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை மூன்று வாரங்களில் நான்காவது முறையாகக் கூடிவிட்டது.
அடுத்த ஆண்டில் மிகவும் பிரபலமான தரமிக்க 95 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டர் $3 என்ற அளவைத் தொட்டு விடும். மிகவும் உயர்வான சிறப்பு தர பெட்ரோல் விலை லிட்டர் $4 ஐக் கடக்கும் போல் தெரிகிறது.
கால்டெக்ஸ் நிறுவனம் புதன்கிழமை விலையை உயர்த்தியதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அமைத்துள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை விலை கண்காணிப்புத் தளம் 'ஃபியூல் காக்கி' தெரிவித்தது.
கால்டெக்ஸ் நிலையத்தில் 92 ஆக்டேன் பெட்ரோல் விலை இப்போது தள்ளுபடிக்கு முன்னதாக $2.65 ஆக உள்ளது. 95 ஆக்டேன் பெட்ரோல் விலை $2.69. டீசல் விலை லிட்டர் $2.23. சிறப்பு 98 ரக எண்ணெய் $3.32 ஆக விற்கப்படுகிறது.
கால்டெக்ஸ் நிறுவனத்தின் 95 ரக பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ஷெல் நிறுவனத்தின் விலையுடன் ஒத்துள்ளன. இந்த விலைகள் எஸ்பிசி நிறுவனத்தின் சில்லறை விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது 11 காசு அதிகமாக உள்ளன. எஸ்ஸோ நிறுவனமும் மூன்று நாட்களுக்கு முன் விலையை உயர்த்தியது.
தள்ளுபடிகளுக்குப் பிறகு கால்டெக்ஸ், ஷெல் நிறுவனங்களின் விலைகள் தான் இன்னமும் அதிகமாக உள்ளன.