செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a480ebe8-3a10-458c-a03d-9034c12650c2
-

பிரதமர்: கொவிட்-19ல் இருந்து மீண்டுவர நிலைப்பாடு அவசியம்

ஆசியானும் அதன் பங்காளி நாடுகளும் கொவிட்-19 கிருமியுடன் வாழவேண்டிய ஒரு நிலையைக் கைகொண்டு உள்ளன. இந்த நிலையில், தகுந்த உத்திபூர்வ சூழ்நிலையும் நிலைப்பாடும் இருந்தால்தான் அந்த நாடுகள் முற்றிலும் மீண்டு வர இயலும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 18 தலைவர்கள் கலந்து கொண்ட கிழக்கு ஆசிய உச்சநிலைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், முக்கிய வல்லரசுகளுக்கு இடையில் ஆதிக்கப் போட்டியும் புவிசார் அரசியல் பதற்றங்களும் ஒரு சவாலாக தொடர்வதைச் சுட்டினார்.

இத்தகைய ஒரு நிலையில், ஆசியானின் நடுநிலைத் தன்மையை நிலைநாட்டுவதில் ஆசியானின் பங்காளித்துவ நாடுகள் காட்டும் கடப்பாடு மனநிறைவாக இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா-சீனா உறவு அமைதிக்கும் செழிப்புக்கும் முக்கியமானது என்ற திரு லீ, இந்த வட்டார நாடுகள் எந்த ஒரு பக்கமும் சேராமல், அந்த இரண்டு நாடுகளோடும் நல்ல உறவைக் கட்டிக்காக்கவே விரும்புகின்றன என்றார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தையை தான் வரவேற்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தென் சீனக் கடல் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூரின் நிலை, நன்கு தெரிந்த, மாறாத ஒன்று என்றார்.

5,000த்தை தாண்டிய அன்றாட கொவிட்-19 தொற்று

சிங்கப்பூரில் முதல்தடவையாக அன்றாட கொவிட்-19 தொற்று 5,000 என்ற எண்ணிக்கையைக் கடந்த புதன்கிழமை கடந்தது. அன்று 5,324 பேருக்குப் புதிதாக தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் 4,651 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளைச் சேர்ந்தவர்கள் 661 பேர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 12 பேர் என்று அமைச்சு கூறியது.

கொரோனா தொற்று காரணமாக புதன்கிழமை பத்து பேர் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 56 முதல் 96 வரை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்குமே உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன என்றும் அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் அந்த 10 பேரையும் சேர்த்து கொவிட்-19 காரணமாக 349 பேர் மரணம் அடைந்து உள்ளனர். புதன்கிழமையுடன் தொடர்ந்து 38 நாளாக மரணச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 184,419 ஆக உள்ளது. பொது மருத்துவமனைகளில் உயிர்வாயு சிகிச்சை பெற்று வருவோர் 308 பேர். 76 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 66 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடமாகும் 'எஃப்1 பிட்'

மரினா பேயில் இருக்கும் 'எஃப்1 பிட்' கட்டடம், கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ வசதி இடமாக மாற்றப்படுகிறது. அந்தக் கட்டடத்தின் உள்ளே நூற்றுக்கணக்கான படுக்கைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ளதாக நேற்று அங்கு நேரே சென்று பார்த்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதர பல ஏற்பாடுகளையும் அங்கு காண முடிகிறது. அந்த வளாகத்தின் உள்ளே இருக்கும் பல அரங்குகளும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் நூற்றுக்கணக்கான படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடு நடுவே தடுப்புகளும் உள்ளன.

அந்தக் கட்டடம் கொவிட்-19 நோயாளிகளுக்கான பராமரிப்பு இடமாகச் செயல்படும் என்று ஐந்து ஊழியர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

சமூக பராமரிப்பு வசதிகள், கொவிட்-19 சிகிச்சை வசதிகள் ஆகிய இரண்டும் அத்தகைய நோயாளிகளுக்கான பொதுவான இரு வகை ஏற்பாடுகளாக இருக்கும் என்று தெரிகிறது.

கட்டடத்திற்குள் நோயாளிகள் யாரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. என்றாலும் ஆயத்தப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாகவும் அந்தக் கட்டடம் நவம்பரில் திறக்கப்பட்டுவிடும் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.