புதிதாக வேலையில் சேரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் இன்னும் சிறந்த முறையில் ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன் மனிதவள அமைச்சு பணிப்பெண் நியமன நிறுவனங்களுக்கு புதிய நிபந்தனையை விதிக்கிறது.
பணிப்பெண் வேலையில் சேர்ந்த பிறகு மூன்று மாதங்களுக்குள் அவருடன் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தொடர்புகொண்டு வேலை நிலவரங்களைப் பற்றி நிறுவனங்கள் கேட்டறிய வேண்டும்.
தொலைபேசி மூலம் பணிப்பெண்களுடன் தொடர்புகொண்டு அவை இதைச் செய்யலாம்.
அல்லது நேரே சென்று பரிசோதித்து வேலை நிலவரங்களைக் கண்டறியலாம் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
2021 டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு வேலையில் அமர்த்தப்படும் அனைத்து பணிப்பெண்களுக்கும் இது பொருந்தும்.
பணிப்பெண் வேலை நியமன நிறுவன உரிம நிபந்தனைச் சட்டத்தின்கீழ் இது கட்டாயமாக்கப்படும்.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு இன்னும் சிறந்த முறையில் ஆதரவு அளிக்கும் முயற்சிகளில் ஒன்றாக இத்தகைய நிபந்தனை இந்த ஆண்டு முடிவில் நடப்புக்கு வரும் என்று ஏற்கெனவே அமைச்சு தெரிவித்து இருந்தது.
பணிப்பெண்களுக்கும் முதலாளி களுக்கும் இடையில் வேலை நியமனங்களை ஏற்படுத்தித் தருவதில் இத்தகைய நிறுவனங்கள் முக்கிய மத்திய அமைப்பாகச் செயல்படுவதை அமைச்சு சுட்டியது.
இல்லப் பணிப்பெண் நியமன நியதிகளையும் நெறிமுறை களையும் பணிப்பெண்களுக்கும் அவர்களின் முதலாளிகளுக்கும் தெளிவாக விளக்குவதில் இந்த நிறுவனங்கள் பயனுள்ள பங்காற்ற முடியும் என்றது அமைச்சு.
முதலாளிகள் மாதம் ஒரு நாள் பணிப்பெண்ணுக்கு விடுமுறை அளிக்க வேண்டி இருக்கும் என்றும் இதை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்றும் இந்த ஏற்பாடு 2022 முடிவில் நடப்புக்கு வரும் என்றும் ஜூலை மாதம் அமைச்சு தெரிவித்தது.