உணவங்காடி நிலையங்களில் அக்டோபர் 20ஆம் தேதிக்கும் அக்டோபர் 26ஆம் தேதிக்கும் இடையில் உணவு உண்டவர்களில் 38 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், அல்லது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு இடைவெளி விதியை நடைமுறைப்படுத்தும் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட பரி சோதனையின்போது உணவங்காடி நிலையங்களில் அவர்கள் விதியை மீறியிருந்தது தெரியவந்ததாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
அந்த நபர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. அவர்களுக்கான தண்டனை பற்றிய விவரங்களை வாரியம் வெளியிடவில்லை. உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்கள் மட்டுமே சாப்பிட அனுமதிக்கும் செயல்திட்டம் அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கியது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது ஒரு தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொண்டுள்ள மக்கள் உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது.
வேண்டுமானால் உணவை வாங்கிச்செல்லலாம். 12 மற்றும் அதற்கும் குறைந்த வயது சிறார்களுக்கு விதிவிலக்கு உண்டு.
இதனிடையே, உணவங்காடி நிலையங்களில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் ஞாயிறு வரை கொவிட்-19 விதியை மீறிய 41 பேருக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்ததாக வாரியம் கூறியது.

