செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
c8db7db1-acac-48fd-ac12-9d62faef7764
-

வீரச் செயலுக்கு விருது

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஹோட்டல் விருந்தாளியால் அறையில் தீ மூண்ட சம்பவத்தைக் கையாண்ட ஆடவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. துணைப் பாதுகாப்பு அதிகாரியான திரு யஹ்யா அப்துல் ரஹ்மானுக்கு (படம்) 29 வயது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இவர் வேலை செய்துகொண்டிருந்த ஜென் சிங்கப்பூர் தங்ளின் ஹோட்டலின் அறை ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதிலிருந்த விருந்தாளி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதால் அவ்வாறு நிகழ்ந்தது. தடுமாறாமல் அமைதியான முறையில் திரு யஹ்யா நிலைமையைக் கையாண்டார், தீயை அணைத்து விருந்தாளியைக் காப்பாற்றினார். திரு யஹ்யா உட்பட 10 ஹோட்டல்களைச் சேர்ந்த 20 பேருக்கு ஹோட்டல் பாதுகாப்பு மாநாட்டில் அவர்களின் வீரச் செயல்களுக்காக விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

உள்ளூரில் தயாராகும் பொருட்கள், உணவை விளம்பரப்படுத்த முயற்சி

சிங்கப்பூரில் உற்பத்தியாகும் உணவு, வீட்டுப் பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 'ஃபேர்பிரைஸ்' அமைப்பு 'மேட் இன் சிங்கப்பூர்' விற்பனை விழாவை நடத்துகிறது. இவ்விழா, 10வது ஆண்டாக நடைபெறுகிறது. வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், 'ஃபேர்பிரைஸ்' குழுமத்தின் தலைமை நிர்வாகி சியா கியான் பெங் ஆகியோர் விழாவைத் தொடங்கிவைத்தனர்.

உணவுப் பாதுகாப்பு, சிங்கப்பூர் கருத்தில் கொள்ளும் முக்கிய அம்சங்களில் ஒன்று எனத் திரு கான் குறிப்பிட்டார். அதற்கு உள்ளூரில் தயாராகும் உணவு வகைகளும் பொருட்களும் வகைசெய்வதைச் சுட்டிய அவர், அவற்றின் சிறந்த தரத்தை எடுத்துக்காட்ட 'ஃபேர்பிரைஸ்' நடத்தும் விழா உதவுகிறது என்றார்.

கூடுதல் வீரர்களுக்கு வாய்ப்பு

தரக்கூடிய விளையாட்டுகள்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இடம்பெறும் போட்டிகளைப் பொறுத்தவரை வருங்காலத்தில் அதுவும் ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளின் தொடர்பில் ஆறாவது முறையாக நடத்தப்பட்ட ஆசியான் அமைச்சர்கள்நிலை மாநாட்டில் மூத்த அதிகாரிகள் இவ்வாறு உறுதியளித்தனர்.

தென்கிழக்காசிய விளையாட்டுகள் சம்மேளனம், இதர தேசிய ஒலிம்பிக் மன்றங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்போது ஆசியான் விளையாட்டாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் அமையும் எனச் சொல்லப்படுகிறது. இது, முக்கிய விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு முன்பு வீரர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரோமில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொள்வார்

இத்தாலியத் தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொள்வார். வரும் திங்கட்கிழமை வரை அவர் ரோமில் இருப்பார். உலகின் ஆகப் பெரிய பொருளியல் நாடுகளை ஒன்றிணைக்கும் ஜி20 கூட்டணியில் சிங்கப்பூர் இடம்பெறவில்லை. இருந்தாலும் அழைப்பு நாடுகளாகப் பங்கேற்கவிருக்கும் பல நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. 2010, 2011ஆம் ஆண்டுகளிலும் 2013ஆம் ஆண்டிலிருந்து சென்ற ஆண்டு வரையிலும் சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநாடு நாளை தொடங்குகிறது. கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலுக்குப் பிறகு முதன்முறையாக இதில் பங்கேற்பாளர்கள் நேரடியாகக் கலந்துகொள்கின்றனர். சென்ற ஆண்டின் மாநாடு சவூதி அரேபியாவில் மெய்நிகராக நடைபெற்றது. ஜி20 மாநாடு முதன் முதலாக 1999ல் நடத்தப்பட்டது. உலகின் ஆகப்பெரிய பொருளியல் நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் கலந்துபேசுவதற்காக மாநாடு தொடங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு உலகைப் பாதித்த நிதி நெருக்கடியைத் தொடர்ந்து பெரிய பொருளியல் நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.