குடும்ப வன்முறைகளுக்கு எதிரான பணிக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் பரிந்துரைகள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்படும். அவற்றில் மூன்று பரிந்துரைகள் முதலில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்தல், திருமண ஆயத்தம் தொடர்பான போதனையை மேம்படுத்துதல், தேசிய குடும்ப வன்முறை நேரடி உதவி தொலைபேசி தொடர்பை வலுப் படுத்துதல் ஆகியன அந்த மூன்று பரிந்துரைகள்.
சுவா சூ காங்கில் உள்ள ஃபெய் யூவே குடும்ப சேவை நிலையத்துக்கு நேற்று அமைச்சர் மசகோஸ் வருகையளித்தார். அப்போது அங்குள்ள ஊழியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
பரிந்துரைகளை பற்றி மேலும் பேசிய அவர், சட்ட வழியில் மேம் படுத்த வேண்டிய சில பரிந்துரைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சொன்னார்.
"ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கலாம், சில அம்சங்களில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டியிருக்கிறது அல்லது தற்போதுள்ள சட்டங்களைத் திருத்த வேண்டியிருக்கிறது. குடும்ப வன்முறைகளை எதிர்கொள்வதில் போலிஸ் போன்ற அரசாங்க அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதனால் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்," என்றார் அமைச்சர்.
ஏறக்குறைய 3,600 குடும்ப வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்த குடும்ப வன்முறைக்கு எதிரான பணிக்குழு கடந்த செப்டம்பர் மாதம் 16 பரிந்துரைகளை முன்வைத்தது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர் எளிதில் உதவிகளைப் பெறவும் தங்களை சிறந்த வழியில் பாதுகாத்துக் கொள்ளவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர் அனுமதி வழங்காவிட்டாலும், அவர்களை ஆதிக்கம் செலுத்துபவர்கள் தடையாக இருந்தாலும் சமூகநல தலைமை இயக்குநர் உட்பட மூன்றாம் தரப்பினர் தனிநபர் பாதுகாப்பு உத்தரவுக்கு விண்ணப்பிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஃபேஸ்புக்கில் தமது கருத்தை பதிவிட்ட அமைச்சர் மசகோஸ், அரசாங்கமும் சமூகநல அமைப்புகளும் இணைந்து செயல்பட்டால் குடும்ப வன்முறையை தடுத்து நிறுத்த முடியும் என்பதற்கு பணிக்குழுவின் பரிந்துரைகள் சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார்.

