பொதுச்சேவை அதிகாரியிடம் பலவந்தமாக நடந்துகொண்டதற்காகவும் போதைப்பொருள் குற்றம் தொடர்பான சந்தேகத்தின் பேரிலும் ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
வழக்கமான சோதனையின்போது காரில் தப்பிச்சென்ற ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுக் காலை அப்பர் பாய லேபார் வட்டாரத்தில் சுமார் 9.50 மணியளவில் போக்குவரத்து போலிசார் வழக்கமான சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது சோதனைக்காக ஒரு காரை நிறுத்த சைகை காட்டினர்.
அப்போது நிறுத்தாமல் சென்ற காரை போக்குவரத்து போலிசார் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். கேலாங் ஈஸ்ட் அவென்யூ 1ஐ நெருங்கியதுபோது முன்னால் சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் காரை மடக்கி நிறுத்தினார்.
ஆனால் அந்த கார் ஓட்டுநர் வேகமாக காரை பின்னால் ஓட்டி மீண்டும் தப்பிக்க முயற்சி செய்தார்.
அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த மற்றொரு போலிஸ்காரர் மீது கார் மோதியது. போலிஸ்காரர் உடனே பக்கவாட்டில் குதித்துத் தப்பினார்.
அவருக்கு சில சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
அதன் பிறகு ஓட்டுநரை தேடிக்கண்டுபிடித்து போலிசார் கைது செய்தனர். அவருக்கு 37 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 34 வயது பயணியும் பொதுச்சேவை அதிகாரியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தொடர்பான குற்றச்செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
போலிசார் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.

