சமய, இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக இசைக்கலைஞர்மீது குற்றஞ்சாட்டப்படும்

சமய, இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாக இசைக்கலைஞர்மீது குற்றஞ்சாட்டப்படும்

2 mins read
36bb4cb9-0469-4dcc-93ed-06cefe4cfa9d
சுபாஷ் நாயர்மீது வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

உள்ளூர் இசைக் கலைஞரான 29 வயது சுபாஷ் நாயர், வெவ்வேறு சமய மற்றும் இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்றதன் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இவர்மீது வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

கடந்த 2019ஆம் ஆண்டில் இனம் சார்ந்த உணர்வுகளைத் தூண்டும் வகையில் காணொளி வெளியிட்டதற்காக இவருக்கு 24 மாதகால நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் புதிய குற்றச்சாட்டுகளின் மூலம் திரு நாயர் அந்த எச்சரிக்கையையும் மீறியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, சீன கிறிஸ்தவர்கள் மற்றொரு சமூகம் பற்றி கூறிய வெறுக்கத்தக்க கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் திரு நாயர் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க கருத்துகளை மலாய் முஸ்லிம்கள் வெளியிட்டிருந்தால், அவர்கள் வேறு விதமாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்று திரு நாயர் குறிப்பிட்டிருந்ததாக போலிசார் கூறினர்.

மேலும், சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையேயும் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி திரு நாயர் கருத்து கூறியிருந்தார்.

2019 ஜூலை 2ஆம் தேதி நிகழ்ந்த ஆர்ச்சர்ட் டவர்ஸ் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன ஆடவரை சம்பந்தப்பட்ட அமைப்புகள் கடுமையற்ற முறையில் கையாண்டதாகவும் அவர் அவதூறு கூறியிருந்தார்.

வெவ்வேறு சமய மற்றும் இனக் குழுக்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்த முயன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
குற்றச்சாட்டு