குறைந்த சம்பள ஊழியர்களுக்கு தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரை
மாதம் $2,000 வரை ஈட்டும் குறைந்த வருமான ஊழியர்களுக்கு $70 முதல் $90 வரை, அல்லது 4.5% முதல் 7.5% வரை, இவற்றில் எது அதிகமோ அதை ஊதிய உயர்வாக வழங்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரைந்துள்ளது.
நீடித்த ஊதிய உயர்வை உறுதிசெய்ய இடைநிலை ஊதிய அளவைக் காட்டிலும் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியம் வேகமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 வரைக்குமான தனது வழிகாட்டி நெறிமுறைகளை மன்றம் நேற்று வெளியிட்டது.
குறைந்த சம்பள ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பரிந்துரையில், குறைந்த சம்பள ஊழியர்களுக்கான படிப்படியான சம்பள உயர்வு முறை மொத்த மாதாந்திர சம்பள அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர அது அடிப்படை மாதாந்திர சம்பள அடிப்படையில் இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டது.
மொத்த மாதாந்திர சம்பளத்தில் அடிப்படை மாதாந்திர சம்பளம், கூடுதல் நேரத்துக்கான ஊதியம், படித்தொகை, ஊக்கத்தொகை, இதர வழக்கமான ரொக்க வழங்கீடுகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இது குறித்து நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், "மாதம் $2,000 வரை ஊதியம் ஈட்டும் ஊழியர்களுக்கான இந்த பரிந்துரைகளால் இன்னும் அதிக மான ஊழியர்கள் இப்பிரிவில் சேர்க் கப்பட்டு பலன் அடைவார்கள்," என்றார்.
தேசிய சம்பள மன்றம், இந்த ஆண்டில்தான் குறைந்த சம்பள ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழு வெளியிட்ட குறைந்த சம்பள ஊழியர்கள் படிப்படியான சம்பள முறைக்கு மாறுவதற்கான பரிந்துரைகளைப் பரிசீலித்து அவற்றை ஏற்றுக்கொண்டு தனது முடிவை அறிவித்துள்ளது.
தேசிய சம்பள மன்றத்தின் இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்னும் சில துறைகள் அல்லது நிறுவனங்கள் பொருளியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதையும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது அல்லது மேலும் ஊதியத்தைக் குறைப்பது குறித்து அவை பரிசீலித்து வருவதையும் உணர்ந்துள்ள மன்றம், அவற்றுக்கு வேறுவிதமான அணுகுமுறையைப் பரிந்துரைத்துள்ளது.
ஊதிய உயர்வை நிறுத்திவைப்பது என முடிவுசெய்துள்ள நிறுவனங்கள், குறைந்த வருமான ஊழியர்களுக்கு 50 வெள்ளிவரை ஊதிய உயர்வு அளிப்பது குறித்தும் மேலும் ஊதியக் குறைப்பை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அவ்வாறு செய்யாமல் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்று மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.