அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி, அதிக மதிப்புள்ள பொருட்களை உருவாக்க விரும்பும் வர்த்தகங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
எஸ்ஜி டெக் வர்த்தகச் சங்கமும் ஆட்டோடெஸ்க் எனும் மென்பொருள் நிறுவனமும் இணைந்து நேற்று நடத்திய இணையக் கருத்தரங்கில் பேசிய திரு கான், "பல வர்த்தகங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துக்கு உருமாறும் முயற்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.
"மேலும் அதன் உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு, தங்கள் ஊழியரணியின் திறன்களை மேம்படுத்தி, செயல்முறை சிக்கல்களைச் சமாளிக்க பாடுபடுகின்றன.
"வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்குத் தகுதி பயிற்சிஅளித்தல், செயல்முறையிலிருந்து விலைப்பட்டியல் தயாரிப்பது வரையில் மின்னிலக்கத்தைப் பயன்படுத்துதல், வெவ்வெறு தேவைக்கேற்ப உற்பத்திப் பிரிவை தானியக்கமயமாக்குதல் போன்றவை நிறுவனங்கள் மேற்கொள்ளும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் சில.
"இந்த முயற்சிகள் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் மீள்திறனை மேம்படுத்தியுள்ளதால், கடந்த ஆண்டில் எல்லா துறைகளிலும் வலுவான வளர்ச்சியைக் காண முடிந்தது. அது இந்த ஆண்டும் தொடர்ந்தது," என்றார்.
"இருப்பினும் நாம் இன்னும் சிக்கலான காலகட்டத்திலிருந்து மீண்டு வரவில்லை. இப்போது தொடர் விநியோகத்தில் இடையூறுகள் போன்ற புதிய சவால்கள் தலையெடுத்துள்ளன.
"நாம் இப்போது கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய சூழலுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், உள்கட்டமைப்பு, திறன் அல்லது நிதி உதவி போன்ற மேம்பட்ட உற்பத்தியை நோக்கி செயல்படும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உதாரணமாக ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தை அமைச்சர் கான் சுட்டிக்காட்டினார்.
அது உற்பத்தியாளர்கள் தங்கள் யோசனைகளை, புத்தாக்கச் சிந்தனைகளை, ஆக்கபூர்வ திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நடுவமாகக் திகழும்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் தொழில்துறை உருமாற்றக் கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்ட திரு கான், அதில் 50 நாடுகளைச் சேர்ந்த 100 தொழில்துறை 4.0 தீர்வுகள் வழங்குநர்கள் பங்கேற்பார்கள் என்றும் விவரித்தார்.
"இதுபோன்ற சிறந்த தொழில்துறைத் திட்டங்கள், மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான உலகளாவிய வர்த்தக, புத்தாக்க, திறனாளர் நடுவமாக சிங்கப்பூரை உலகுக்கு எடுத்துக்காட்டும் இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்லும்," என்றார் அமைச்சர் கான்.