தேசிய தினக் காலத்தின்போது மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் சிங்கப்பூரர்கள் தேசிய கொடியைப் பறக்கவிட அனுமதிக்கப்படலாம். தேசிய கொடியின் மரியாதைக்கு எவ்வித பங்கமும் இல்லாமல் தேசிய கொடி உட்பட தேசிய மரபுரிமைச் சின்னங்களையும் இன்னும் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்த புதிய சட்டத் திருத்தம் வழி வகுக்கலாம்.
சிங்கப்பூர் மரபுரிமைச் சின்னங்கள், தேசிய கொடி, தேசிய கீதம் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர, தான் பரிசீலித்து வருவதாக நேற்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்தது.
தற்போதைய அந்தச் சட்டத்தின்படி, தேசிய கொடி ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரைதான் பறக்கவிட அனுமதிக்கப்படும். இந்தக் காலத்தைத் தாண்டி இதர விழாக் காலங்களிலும் அவற்றைப் பறக்கவிட, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
கலைநயத்துடனும் வர்த்தக பயன்பாட்டுக்காகவும் தேசிய கொடி, தேசிய கீதம், நாட்டுப் பற்று ஆகிய தேசிய மரபுரிமைச் சின்னங்களை மக்கள் எவ்வித அச்சமும் இன்றி பயன்படுத்த சட்டத் திருத்தம் வகை செய்யும்.
இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்களும் தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் அடுத்த ஆண்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அது அடுத்த ஆண்டிலேயே இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சட்ட அடிப்படை அல்லாத இதர மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
நாட்டுப் பற்றுறுதி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கான தரப்படுத்தப்பட்ட சைகை மொழியும் தேசிய மரபுரிமைச் சின்னங்களை மக்களின் வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக விளங்குவது குறித்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதும் அவற்றில் அடங்கும்.
தேசிய மரபுரிமைச் சின்னங்களை கலைநயத்துடனும் நன்மதிப்புடனும் பயன்படுத்த பள்ளிகளில் கலைக் கல்வி போதிக்கப்படவும் பரிந்துரைக்கப்படலாம்.
தேசிய மரபுரிமைச் சின்னங்களின் பயன்பாடு பற்றி ஆராய்வ தற்கு அமைக்கப்பட்ட குடிமக்கள் பணிக்குழு, கடந்த ஜூலை மாதம்அதன் அறிக்கையை வெளியிட்டது.
அதில், மக்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களை அதற்குரிய பெருமதிப்புடன் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் சட்டத்தில் சற்று தளர்வைக் கொண்டு வரலாம் என்று பணிக்குழு பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரைகள் குறித்து கருத்துரைத்த கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், "நமது தேசிய மரபுரிமைச் சின்னங்களை மதிப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ள முறையான பொதுக் கல்வி அவசியம் என்பதைப் பணிக்குழு சரியாக அடையாளம் கண்டுள்ளது.
"அக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தப்படி, தேசிய மரபுரிமைச் சின்னங்களை தேசிய மைல்கல் சாதனைகளில் முக்கியமான இடம் பெறச் செய்வதுடன், அவற்றை அன்றாட வாழ்க்கையிலும் மக்கள் பயன்படுத்த வழி ஏற்படுத்தப்படலாம்.
"கொவிட்-19 சூழலில் மக்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் தேசிய கொடியைப் பறக்கவிடும் காலத்தை அரசாங்கம் கடந்த ஆண்டு நீட்டித்தது. அந்தக் கால நீட்டிப்பு தொடரலாம் என்றும் பணிக் குழு பரிந்துரைத்துள்ளது," என்றும் சொன்னார்.
"தேசிய மரபுரிமைச் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு பற்றியும் பணிக் குழுவும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் நன்கு அறிந்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில், தேசிய மரபுரிமைச் சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் செயல்கள் பற்றி புகார் அளிக்க இணையத் தளம் ஒன்றை அமைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.
தேசிய மரபுரிமைச் சின்னங்களை மின்னலக்கப் பயன்பாடு உட்பட முறையாகப் பயன்படுத்துவது பற்றிய முழுமையான வழிகாட்டியை வெளியிடவும் அமைச்சு பரிசீலித்து வருகிறது.

