சிங்கப்பூரில் 44 முதல் 90 வயதிற்குட்பட்ட மேலும் 16 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக வெள்ளிக்கிழமை மாண்டுவிட்டனர். அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாண்டுவிட்ட 44 வயதுக்காரர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்று அமைச்சு தெரிவித்தது.
புதிதாக மரணமடைந்தவர்களையும் சேர்த்து மரணமுற்றோர் மொத்த எண்ணிக்கை 380 ஆகக் கூடிவிட்டது.
தொடர்ந்து 40வது நாளாக கொரோனா தொற்றால் மரணம் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை புதிதாக 4,248 பேரை கொரோனா தொற்றியதாக அமைச்சு உறுதிப்படுத்தியது.
புதிதாக கிருமி தொற்றியோரில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3,710 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்த 536 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்த இருவரும் அடங்குவர்.
சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் 559 பேருக்கு வயது 60க்கும் மேல் என்றும் அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூரில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 192,099 ஆக இருக்கிறது.
பொது மருத்துவமனைகளில் 257 நோயாளிகள் உயிர்வாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் 80 பேர் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 59 பேருக்குச் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.