கட்டுமானம், கப்பல் பட்டறை, பதனீட்டுத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்நோக்கும் ஊழியர் பற்றாக்குறையைப் போக்கவும் ஒர்க்பர்மிட் ஊழியர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ள ஆதரவு அளிக்கவும் உதவும் புதிய நடவடிக்கைகள் இடம்பெற இருக்கின்றன.
சிங்கப்பூரில் அனுபவமிக்க ஊழியர்களைக் கட்டுமானத் துறை தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ள உதவும் திட்டம், கப்பல் பட்டறை, பதனீட்டுத் துறைகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வேலை நியமன அனுமதி முடிந்துவிட்ட ஊழியர்கள் விரும்பினால் தொடர்ந்து சிங்கப்பூரில் புதிய வேலைகளைப் பெற இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.
சிங்கப்பூர் கடல் தொழில்துறைகள் சங்கம், பதனீட்டுத் தொழில்துறை சங்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத் தைக் கப்பல் பட்டறைத் துறைக்கும் பதனீட்டுத் துறைக்கும் அமைச்சு விரிவுபடுத்துகிறது.
இந்தச் சங்கங்கள், தங்கள் திட்டங்கள் பற்றிய மேல் விவரங்களை அவை தயாரானதும் வெளியிடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டம் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்தச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறி உள்ளனர்.
ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் கட்டுமானத் துறையில் செப்டம்பர் 1ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அது இதுநாள் வரை 52 நிறுவனங்களுக்கு நன்மை அளித்து இருக்கிறது.
அந்தத் திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை நடப்பில் இருக்கும். பிறகு அது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும்.
இப்போது முதலாளி ஒருவர், ஒர்க்பர்மிட் ஊழியர் ஒருவரை, அவருடைய ஒர்க்பர்மிட் காலாவதி ஆவதற்கு முன்பாக 21 நாள் முதல் 40 நாட்களுக்குள் அந்த ஊழியரின் முதலாளியின் சம்மதத்தைப் பெறாமலேயே வேலையில் அமர்த்திக் கொள்ளலாம்.
இனிமேல் ஒர்க்பர்மிட் ஊழியர்கள் தங்களுக்கான வேலை அனுமதி காலாவதியாகும் வரை, இப்போதைய முதலாளிகளிடம் தொடர்ந்து வேலை பார்க்கலாம்.
காலாவதியானதும் ஊழியர், முதலாளி இருவருக்கும் இடைப்பட்ட பரஸ்பர இணக்கத்தின் பேரில் 30 நாட்களுக்கு அந்த ஊழியர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்.
அந்த 30 நாளில் அவர் வேறு வேலையைத் தேடலாம். அவருடைய இப்போதைய முதலாளியின் அனுமதி அதற்குத் தேவையில்லை.
அந்த ஊழியர் வேறு வேலையைப் பெற தொழில்துறைச் சங்கங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.