கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மீட்சியடைய சுகாதார, நிதித் துறையில் அணுக்க ஒத்துழைப்புத் தேவை என்று ஜி20 கூட்டத்தில் சிங்கப்பூர் அமைச்சர் கள் வலியுறுத்தினர்.
ஜி20 நிதி, சுகாதார அமைச்சர்களின் கூட்டுக் கூட்டம் ரோம் நகரில் நடந்தது. அதில் சிங்கப்பூர் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிங்கப்பூரில் இருந்தபடி மெய்நிகர் ரீதியில் அதில் பங்கேற்றார்.
சுகாதார, நிதித் துறைகளில் உலக ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டியதன் தேவை பற்றி இருவரும் உரையாற்றினர்.
இந்த ஆண்டின் ஜி20 கூட்டத்திற்கு முன்னதாக கொரோனா தொற்றைச் சமாளிக்க ஆயத்தமாவதற்கு தேவைப்படும் நிதி வளத்தை ஆராய சுதந்திரமான குழு ஒன்றை ஜி20 அமைப்பு அமைத்தது.
அந்தக் குழுவிற்கு மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவர் கோஸி ஒகொஞ்சோ, அமெரிக்காவின் முன்னாள் நிதி அமைச்சரான லேரி சம்மர்ஸ்சும் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அனைத்துலக ஒத்துழைப்பையும் ஒருமுகப்பாட்டையும் பலப்படுத்துவதற்காக சுகாதார, நிதி அமைச்சர்களைக் கொண்ட புதிய உலகளாவிய சபை ஒன்றை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.
பொதுச் சுகாதாரத்திற்கான இப்போதைய உலக முறை சிதறுண்டு இருக்கிறது. அதற்குப் போதிய நிதி வளம் இல்லை என்பதே கொவிட்-19 தொற்றின் மூலம் தெரியவந்து இருப்பதாக அமைச்சர் திரு வோங் சுட்டினார்.
இப்போதைய மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்குச் சரிசமமான செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையில் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லை என்பதையும் அவர்கள் கோடிட்டு காட்டினர்.
அதேபோலவே நிதியிலும் வளங்களிலும் உள்ள பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத்தினார்.