இந்தியப் பாரம்பரியத்தில் விழா, விருந்து, சடங்குகளில் முதல் இடம் பிடிப்பது வாழையிலை. சிங்கப்பூருக்கு வாழை இலைகள் குறிப்பாக மலேசியாவின் ஜோகூர் பாருவிலிருந்து வருகிறது. தேக்கா சந்தையிலே இரண்டு மொத்த வாழை இலை கடைகள் உள்ளன.
"பொதுவாக பண்டிகை காலங்களில்தான் வியாபாரம் சூடு பிடிக்கும். ஆனால் கிருமித்தொற்று தொடங்கியதிலிருந்து, மலேசியாவிலிருந்து வாழையிலை வருவது குறைந்துவிட்டது. தேவையிருந்தாலும் இலை போதவில்லை," என்றார் சாமி வாழையிலை கடை உரிமையாளர் திரு கோவிந்தசாமி.
"இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 15 கட்டுகள் மட்டுமே வருகின்றன, என்றார் அவர்.
மேலும், கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சந்தையின் உள்ளுக்குள் இருக்கும் சில கடைகள் பாதிக்கப்படுகின்றன. இறைச்சி வாங்குவோர்கூட இந்தப் பக்கம் வருவதில்லை.
"ஒரு நாளைக்கு இலைகளை விற்று $40 கிடைப்பதே பெரிய விஷயம். முன்னரோ ஒருநாளில் எப்படியும் $80 ஈட்டிவிடலாம்," என்றார் மற்றொரு வாழையிலை வியாபாரியான திருமதி தம்பியய்யா தனக்கொடி.