16 வயதுக்கும் 71 வயதுக்கும் இடைப்பட்ட 200க்கும் மேற்பட்டோர், உரிமமில்லாத கடன் கொடுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 18ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை தீவு முழுவதும் இரண்டு வாரங்களாக போலிசார் நடத்திய சோதனையின்மூலம் இவர்கள் பிடிபட்டனர்.
ஆரம்பக்கட்ட சோதனைகளில் பிடிபட்ட 203 சந்தேக நபரில் 48 பேர் கடன் முதலைகளின் ஏவலாளிகளாகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது. மேலும் 11 சந்தேக நபர்கள், கடன் வாங்கியவர்களுக்குத் தொல்லை கொடுத்ததாக நம்பப்படுகிறது.
எஞ்சியுள்ள 144 சந்தேக நபர்கள் கடன் முதலைகளின் பயன்பாட்டுக்காக வங்கிக்கணக்குகளைத் திறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.