ஆஸ்திரேலியாவுக்குத் தனிமை
உத்தரவின்றி சென்று வரலாம்
தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், இம்மாதம் 21ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குத் தனிமை உத்தரவு ஏதுமின்றி பயணம் செய்யலாம். இதன்படி, ஆஸ்திரேலியாவிலும் சிங்கப்பூரிலும் அவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றத் தேவை இராது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா பகுதிகளுக்குள் சுற்றுப்பயணிகள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவர் என்றும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்றத் தேவையில்லை என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
புதிய உச்சம்: $1.36 மில்லியனுக்கு
விலைபோன பீஷான் ஐந்தறை வீடு
பீஷான் வட்டாரத்தில் உள்ள ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்று, $1.36 மில்லியனுக்குக் கைமாறி உள்ளது. மறுவிற்பனைச் சந்தையில் இது ஒரு புதிய உச்சம் எனக் கூறப்படுகிறது. மறுவிற்பனைச் சந்தையில் வீட்டை விளம்பரப்படுத்தி மூன்றே நாட்களில் இந்தப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. வடிவமைத்து, கட்டி, விற்பனை செய்யப்பட்ட 'நேச்சுரா லாஃப்ட்' திட்டத்தின்கீழ் அமைந்து உள்ளது இந்த 120 சதுர மீட்டர் வீடு. பீஷான் ஸ்திரீட் 24, புளோக் 273Bன் 37வது மாடியில் அமைந்த அந்த வீடு, முன்னதாக அதே திட்டத்தின் ஐந்தறை வீடு ஒன்று $1.295 மில்லியனுக்கு விலைபோனதை முறியடித்துவிட்டது.
யுனைடெட் ஏர்லைன்ஸ், எஸ்ஐஏ கூட்டணி
அமெரிக்க விமான நிறுவனமான 'யுனைடெட் ஏர்லைன்ஸ்', சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, மேலும் அதிகமான பயணிகளை சாங்கி விமான நிலையம் வரவேற்கக்கூடும். இந்த ஒப்பந்தத்தின் வழி, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான சிறப்புப் பயணப் பாதைத் திட்டம் விரிவாக்கம் காணலாம். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் கூடுதல் விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'டிபிஎஸ்' செயலியில் கரியமில வாயு
வெளியேற்றத்தைக் கண்காணிக்கலாம்
டிபிஎஸ் வாடிக்கையாளர்கள், தங்களின் கரியமில வாயு வெளியேற்றத்தை வங்கியின் மின்னிலக்கப் பரிவர்த்தனைச் செயலியிலுள்ள புதிய கணிப்பான் அம்சம் வழி கண்காணிக்கலாம். இந்த அம்சம் ஜனவரி மாதத்திற்குள் செயலியில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிபிஎஸ் கடன் அட்டை, பற்று அட்டை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளரது கரியமில வாயு வெளியேற்றம் குறித்து கணிப்பான் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்.

