யூஹுவா தனித் தொகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கும் காப்பிக் கடைகளுக்கும் சொந்த இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்பாளர்கள் அக்கடைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தங்களுக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளலாம்.
'தி யூஹுவா ஃபேமிலி பிளாட்ஃபாம்' என்ற பெயரில் இயங்கும் இத்தளத்தில் யூஹுவா தொகுதியில் இயங்கும் 900க்கும் மேற்பட்ட உணவங்காடிக் கடைக்காரர்களும் வர்த்தகர்களும் இடம்பெறுகின்றனர்.
அத்துடன் அவர்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இணையத்தளம் வழி யூஹுவா பற்றுச்சீட்டுகளை மின்னிலக்க முறையில் தொகுதிவாசிகள் பயன்படுத்திடலாம் என்றும் கூறப்பட்டது.
பற்றுச்சீட்டுகள் ஒவ்வொன்றும் $100 மதிப்பிலானவை. யூஹுவா சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் 300 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இப்பற்றுச்சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
இத்தொகுதிக்கான எம்பியும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சருமான கிரேஸ் ஃபூ, பற்றுச்சீட்டுகளை வழங்கினார்.

