சாலையில் வாகனங்களைக் குறைத்துக்கொள்ளும் இலக்குடன் சிங்கப்பூர் மேலும் அதிகமான மிதிவண்டிப் பாதைகளையும் நிறுத்துமிடங்களையும் தீவு முழுவதும் அமைத்துத் தரத் திட்டமிட்டுள்ளது.
அங் மோ கியோ, பிடோக், பொங்கோல் வட்டாரங்களில் கூடுதல் மிதிவண்டிப் பாதைகளை எதிர்பார்க்கலாம்.
அத்துடன் எம்ஆர்டி நிலையங்களில் 3,000க்கும் மேற்பட்ட மிதிவண்டி நிறுத்துமிடங்களும் பொருத்தப்படவுள்ளன.
சிங்கப்பூரின் மிதிவண்டிக் கட்டமைப்பை 2020ஆம் ஆண்டின் 440 கிலோமீட்டரிலிருந்து 2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோமீட்டராக்க வேண்டும் என்ற பெருந்திட்டத்தின்கீழ் இவ்வாறு புதிய மிதிவண்டிப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
மிதிவண்டி ஓட்டுபவர்களை எம்ஆர்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய வசதிகள் கொண்ட இடங்களுக்கு இணைக்கவும் மிதிவண்டி ஓட்டுவதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் கிட்டத்தட்ட $1 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு வீடமைப்புக் கழக குடியிருப்பு வட்டாரத்திலும் இதுபோன்ற மிதிவண்டிப் பாதைகள் 2023ஆம் ஆண்டுக்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பை இவ்வாறு விரிவுபடுத்தும் அதே வேளையில், பாதசாரிகளும் மிதிவண்டி ஓட்டுநர்களும் பகிரும் நடைபாதைகளில் பாதுகாப்பு அம்சமும் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.