கி. ஜனார்த்தனன்
மலர்கள் என்றாலே சண்முகரூபனுக்கு மகிழ்ச்சி. தெய்வத் திருவுருவங்களுக்கு மலர் அலங்காரம் செய்துவரும் சண்முகரூபன், சிங்கப்பூரின் முதல் நவதான்ய அலங்காரத்தையும் வெற்றிகரமாகச் செய்துள்ளார்.
நெல், கோதுமை, பாசிப்பயிறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை ஆகியவையே நவதானியங்கள் ஆகும்.
தீமிதித் திருவிழாவுக்கான பெரியாச்சி பூஜை, ரத அலங்காரம் போன்றவற்றுக்கு ஆலயத் தொண்டூழியர்களின் உதவியுடன் அலங்காரத்தை வடிவமைத்துத் தயாரித்த ரூபன், இந்த வாய்ப்பைத் தமக்குக் கிடைத்த வரமாகக் கருதுவதாகக் கூறினார்.
"சந்நிதி அலங்காரத்திலும் ஈடுபட்டேன். ஆயினும், பொதுமக்கள் நேரடியாக சந்நிதிக்குள் நுழைய முடியாது. எனவே ஆலயத் தொண்டூழியர்களின் உதவியுடன் அளவுகளை அறிந்து மலர் அலங்காரங்களைத் தயாரித்தேன்," என்று 'நந்தி' மலர் மொத்த வியாபாரத்தை மூன்று ஆண்டுகளாக வீட்டிலிருந்து நடத்திவரும் ரூபன் கூறினார்.
இந்தியாவில் நவதானிய அலங்காரம் செய்யும் திறனைக் கற்றுக்கொண்ட ரூபன், இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அந்த அலங்காரத்தை ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சமர்ப்பித்தார். மயில் வடிவத்திலான அந்த அலங்காரம், மாரியம்மன் திருவுருவத்திற்குப் பின்னே வைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் முதல்முறை இத்தகைய நவதானிய அலங்காரம் செய்யப்பட்டதாக ரூபன் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 7 அடி அகல, 5 அடி நீளத்தில் மயில் பட உருவத்தைக் கொண்ட நவதானிய அலங்காரத்தைச் செய்யத் தொடங்கியதாகத் தெரிவித்த ரூபன், இதை முடிப்பதற்கு 36 மணி நேரம் பிடித்ததாகக் கூறினார்.
மயிலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தானியங்கள் ஒவ்வொன்றாக ஒட்டப்படவேண்டும்.
சொந்த செலவிலும் தயங்காது அலங்காரங்களைத் தயாரிக்கிறார் ரூபன். தமது சேவைக்கு நிதியாதரவு அளிக்க பலர் சுயமாக முன்வருவதாகக் கூறிய இந்த இளையர், கலைநயத்துடன் செய்யப்படும் தெய்வீக அலங்காரங்களுக்காக பல கைகள் சேர்வதாகக் கூறினார்.
"நண்பர்கள், உறவினர்கள் எனப் பணத்தை எதிர்பார்க்காமல் பலரும் முன்வந்து சேவையாற்றுகின்றனர். பென்சன் என்ற நண்பரை இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.
ரூபன் இறைப் பற்றும் கலாசாரப் பற்றும் மிக்கவர் என்று கூறிய அவர் நண்பர் பென்சன் மைக்கல், 21, அவரது திறமையைக் கண்டு தமக்கும் ஆர்வம் கூடியதாகத் தெரிவித்தார்.
"பொதுவாக ஆலயங்களிலும் பூஜை அறையிலும் மலர் அலங்காரங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. ரூபனுக்குப் பிடித்த பல அம்சங்கள் எனக்கும் பிடித்திருப்பதால் நல்ல நண்பர்கள் ஆனோம். அந்த முறையில் அவரது அலங்காரப் பணிகளுக்கு நான் உதவி செய்து வருகிறேன்," என்று பென்சன் கூறினார்.
மெல்ல மெல்லத் தலையெடுத்துவரும் பூக்கடை வியாபாரத்தை நினைத்து மகிழ்வதாகக் கூறும் ரூபன், அடுத்தடுத்த திருவிழாக்களின்போது வித்தியாசமான, கலைநயம் கொண்ட வகையில் தமது இறைத்தொண்டை ஆற்ற விரும்புகிறார்.
"தீபாவளிக்கான முன்பதிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆலயங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் இந்த முன்பதிவுகள் வந்துள்ளன. கொவிட்-19 கிருமிப் பரவலால் முன்பதிவுகள் வழக்கத்தைவிட குறைந்திருந்தாலும் வியாபாரம் இச்சமயத்தில் திருப்திகரமாக நடக்கிறது," என்று அவர் கூறினார்.

