ப. பாலசுப்பிரமணியம்
தந்தை 56 வயது ஜெயசெல்வம், அல்லும் பகலுமாக தமது அனுஷியா பூக்கடை வியாபாரத்தைத் தனி ஆளாக நடத்தி வருவதைப் பார்த்து வளர்ந்தவர் அவரின் மூத்த மகன் 26 வயது ஜெயகிரிஷன்.
இவர் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விண்வெளி, மின்னியல் துறையில் பட்டயக் கல்வியை முடித்தவர்.
வீராசாமி சாலையில் அமைந்துள்ள அனுஷியா பூக்கடையில், அதிக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. பெரும்பாலும் தெரிந்த வாடிக்கையாளர்களே வந்து பூ மாலை வாங்கிச் செல்வர்.
'ஷாப்பி', 'லஸாடா' போன்ற மின் வர்த்தகத் தளங்கள் போல, வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை நாடி வந்தால் அது வியாபாரம் பெருக உதவும் என்று ஜெயகிரிஷன் எண்ணினார். அதன்படி, 2018ஆம் ஆண்டில் அனுஷியா பூக்கடைக்கு மின்வர்த்தக இணையத்தளத்தை உருவாக்க உதவினார் ஜெயகிரிஷன்.
பூக்கடைக்கென ஓர் இணையத்தளத்தை உருவாக்கிய மூத்த மகன்
'பூக்கள் புத்தம்புதிதாக உள்ளனவா என்பதை நேரில் பார்த்துவிட்ட பிறகே வாங்குவேன்' என்ற சிந்தனையுடன் இருக்கும் வாடிக்கையாளர்களிடையே, இணையம் வழி பூக்களை வாங்கச் செய்வதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்கவே செய்தனர். இணையத்தில் பொருட்களை வாங்கும் பழக்கமில்லாத முதியவர்களுக்குத் தொலைபேசி வழி அதனை எவ்வாறு செய்வது என்பதை விளக்க வேண்டியிருந்தது.
இணையம் வழி பூக்களை வாங்கும் சேவையைப் பலரும் நாடுவதை ஊக்குவிக்க, சமூக ஊடகங்களில் தீவிரமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு பூக்கடையின் சேவைகளை விளம்பரப்படுத்துவதாக இருந்தது.
திருமணத்திற்கான பூ மாலைகளைத் தொடுப்பதில் தந்தை கைதேர்ந்தவர்.
இதற்கு இணைய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு வரும் என்ற நம்பிக்கையில் திருமணப் பூமாலைகளைக் கட்டும் சேவையில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினர்.
சமூக ஊடகங்களை நாடிய இளைய மகன்
திரு ஜெயசெல்வத்தின் இளைய மகனான ஜெயகண்ணன், கடையின் 'ஃபேஸ்புக்', 'இன்ஸ்டகிராம்' பக்கங்களை அண்மைக் காலமாக நிர்வகிக்கத் தொடங்கினார்.
தற்போது சிம் அனைத்துலக கல்வி நிலையத்தின் லண்டன் பல்கலைக்கழக தகவல் அறிவியல், வர்த்தக பகுப்பாய்வு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்த 23 வயது இளையர், பூ மாலைகளின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதில் மும்முரம் காட்டினார்.
அத்துடன் பயன்படுத்தும் பூக்களின் தரம், வழங்கும் இதர சேவைகள், திருமணம் நடைபெறும் இடத்தை எவ்வாறு பூக்களால் அலங்கரிப்பர் போன்ற விளக்கங்களை இப்பதிவுகளில் பகிர்ந்துவருகிறார்.
கிருமிக் காலத்தில் கூடுதலாக கைகொடுத்த தொழில்நுட்பம்
சகோதரர்களின் கூட்டு முயற்சி கொவிட்-19 சமயத்தில் பலன் தந்தது. கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்பு நடவடிக்கைகள் 2020ஆம் ஆண்டில் நடப்பில் வந்தபோது, பலதரப்பட்ட கடைகள் மூடப்பட்டன. இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது.
அப்போது வெளியே செல்லத் தயங்கிய மக்கள், இணையத்தளத்தில் பூக்களை வாங்கி, விநியோகச் சேவை மூலம் அவற்றை வீட்டிலேயே பெற்றுக்கொண்டனர். முன்னரே இணையத்தளம் இருந்ததால், தங்களது சேவையை நாடி வந்த வாடிக்கையாளர்கள் திடீரெனப் பன்மடங்கு பெருகி, அவர்களின் அதிகரித்த தேவைகளைப் பூர்த்தி செய்வது சவாலாக அமைந்தது.
முன்பு ஆண்டுக்கு 10 திருமண மாலை 'ஆர்டர்'கள் வருவதற்குப் பதிலாக இப்போது மாதத்திற்கு 10 திருமண மாலைகளுக்கான 'ஆர்டர்'கள் வந்து குவிகின்றன. கட்டணச் சலுகைகள் தருவது, இணையப் பரிவர்த்தனைக்கு மறுநாளே பூக்களை விநியோகம் செய்யும் விரைவு விநியோகச் சேவை வழங்குவது, 'வாட்ஸ்அப்' செயலியில் வரும் பொதுவான கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது போன்ற உத்திகளை இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
"இணையம் வழி பூக்களை விற்க முடியும் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருந்ததன் பயனை இன்று அனுபவிக்கிறோம். கொவிட்-19 கிருமித்தொற்று காலகட்டத்திற்குப் பிறகும் இந்த இணைய சேவையின் மோகம் நிலைத்திருக்கும். ஏனெனில் விநியோகச் சேவை வழி பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் சூழலுக்கு மக்கள் பழகிவிட்டார்கள்," என்று தெரிவித்தார் சீருடைப் படச் சின்னங்களை உருவாக்கும் சொந்த தொழிலில் ஈடுபடும் ஜெயகிரிஷன்.
பூக்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகச் சேவை வழி வழங்க உதவும் மகன்கள், தந்தையின் வேலைப் பளு தொழில்நுட்பம் வழி குறைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.