மாணவர்கள் அனைவருக்குமே கற்கும் ஆர்வம் இயல்பாக இருப்பதாக நம்புகிறார் ஆசிரியர் விக்னேஸ்வரி சுகுமாறன், 32.
அதனால்தான், அனைவரது ஆர்வத்தையும் தூண்டும் வகையில் தாம் கற்பிக்க முயற்சி செய்வதாகக் கூறினார்.
இவ்வாண்டின் ஆங்கிலத் துறைக்கான நல்லாசிரியர் விருதைப் பெற்ற ஏழு ஆசிரியர்களில் யூஹுவா தொடக்கப்பள்ளி ஆசிரியரான விக்னேஸ்வரியும் ஒருவர்.
ஆங்கிலப் பாடத்துறைத் தலைமைத்துவப் பிரிவில் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பயின்ற விக்னேஸ்வரி, மொழிக்கூறுகளை ஆழ்ந்து புரிந்துகொண்டதில் தமது சிந்தனைகளைப் பிறருக்கும் கற்றுத்தரவேண்டும் என்ற எண்ணம் தமக்குள் தோன்றியதாகக் குறிப்பிட்டார்.
"வெவ்வேறு சூழலில் மொழியின் பயன்பாட்டைக் கற்பிப்பது முக்கியம் எனக் கருதுகிறேன். சிறு வயதில் மொழியையும் மொழி நெறிகளையும் நன்கு கற்கும் மாணவர்கள், சமூகச் சூழலுக்குத் தகுந்த விதத்தில் மொழியைப் பயன்படுத்தும் பெரியவர்களாக இருப்பர்," என்று அவர் கூறினார்.
மாறிவரும் உலகில் சூழலுக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் திறனைக் கற்பது முக்கியம் என்ற கொள்கையில் திருவாட்டி விக்னேஸ்வரி, புத்தாக்கமிக்க உத்திகளைக் கையாண்டு வருகிறார்.
தாம் கையாளும் 'ஹாட் சிட்டிங்' என்ற உத்தியைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
"மாணவர்கள் தங்களைக் கதைமாந்தர்களாக நினைத்துக்கொள்வர். சக மாணவர்கள் அவர்களைப் பேட்டி காண்பர். இதன் மூலம் வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து பேசுவது, சிந்திப்பது ஆகியவற்றில் மாணவர்கள் பழகிக் கொள்வர்," என்று அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்களிடையே தலைமைப் பொறுப்பு வகிக்கும் திருவாட்டி விக்னேஸ்வரி, பள்ளி நிலையிலான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
பல்வேறு வகையான புத்தகங்களை வாசிக்கும் திட்டத்தை மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்துள்ளார்.
"எந்தப் பின்புலத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும் அவருக்கு நல்ல வாசிப்பு வளங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதே என் கருத்து. வாசித்ததைப் பற்றி மாணவர்களை ஆசிரியர்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபட வைப்பதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார்.
மாணவர்கள் தங்களது கருத்துகளை சுதந்திரமாகச் சொல்லக்கூடிய இடமாக தமது வகுப்பறையை அமைத்துத் தந்துள்ளதாகவும் திருவாட்டி விக்னேஸ்வரி தெரிவித்தார்.
"எல்லா எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பு உள்ளது. இவற்றை நயமாகவும் நம்பிக்கையுடனும் கூறக் கற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாக இருக்கவேண்டும்.
"கருத்தறிதல் பத்திகளைப் படிக்கும்போது அதன் முதன்மை கருத்து, துணைக் கருத்துகள் மற்றும் உட்பொருளைக் கண்டுபிடிக்க நான் ஊக்குவிப்பேன்," என்று அவர் தெரிவித்தார்.
நேர்முக வகுப்பாக இருந்தாலும் காணொளி வழி இணைய வகுப்பாக இருந்தாலும் எச்சூழலுக்கும் தம்மை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும் விக்னேஸ்வரி, தரமான கற்பித்தலுக்கு ஆசிரியரின் தொடர்ச்சியான கற்றல் தேவை என்று கூறினார்.
விருது பெற்றது தம்மை நெகிழ வைத்திருப்பதாகக் கூறிய இந்த இளம் ஆசிரியர், கற்றல் மீதான ஆர்வத்தை அனைவரிடத்திலும் வளர்க்க ஆசைப்படுவதாகக் கூறினார்.
செய்தி: கி. ஜனார்த்தனன்
படம்: ஸ்பீக் குட் இங்கிலிஷ் மூவ்மண்ட்