நியமனம் பெறாத தொகையை பங்கிட்டுத் தர புதிய அணுகுமுறை
நியமனப் பயனாளி குறிப்பிடப்படாத மத்திய சேம நிதித் தொகையை மாண்டோரின் அன்புக்குரியவர்களுக்கு விரைவில் பங்கிட்டுக் கொடுக்க புதிய அணுகுமுறை ஒன்றை சட்ட அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.
அது சட்டமாக்கப்பட்டால் புதிய அணுகுமுறை அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அணுகுமுறையின்கீழ் தொகையைப் பெற தகுதி பெறும் அனைத்து பயனாளிகளையும் பிரதிநிதிக்கும் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்தப் பிரதிநிதி அனைவரின் சார்பிலும் நியமனம் பெறாத தொகையைப் பெற விண்ணப்பம் செய்வார்.
இந்த அணுகுமுறை மூலம் மற்ற பயனாளிகளின் பணிச் சுமை குறையும் என்றும் தொகையைப் பங்கீட்டுத் தர எடுக்கப்படும் நேரம் பாதியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நியமனம் பெறாத தொகையைப் பங்கிட்டுத் தர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. புதிய அணுகுமுறையின்கீழ் ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பங்கிட்டுத் தந்துவிடலாம் என்று நம்பப்படுகிறது.
வெளிநாட்டுக் கையிருப்புகளை மாற்றுவது தொடர்பாகப் பரிந்துரை
இறையாண்மை சொத்து நிதியை, 'ஜிஐசி' எனும் அரசாங்க முதலீட்டு நிறுவனத்திடம் நீண்டகால நிர்வாகத்துக்காக அதிகாரபூர்வ வெளிநாட்டுக் கையிருப்புகளை மாற்றும் முறையை மாற்றுவது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கையிருப்பு நிர்வாக அரசுப் பத்திரங்களுக்கு (ஆர்எம்ஜிஎஸ்) பதிவு செய்ய ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கும்.
நிதிக் கொள்கையை நடத்துவதற்கும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் தேவையானதை விட அதிகமாக இருக்கும் ஆணையத்தின் அதிகாரபூர்வ வெளிநாட்டு இருப்புகளை 'ஜிஐசி' நிறுவனத்தின் மூலம் நீண்ட கால மேலாண்மைக்காக அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் உதவும்.
சிறைக் கைதிகளுக்கு கல்வி, பயிற்சி அளிக்க அழைப்பு
சிறைத் தண்டனை முடியும் கட்டத்தில் உள்ள சிறைக் கைதிகளுக்குக் கூடிய விரைவில் கல்வி, பயிற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலையானதும் வேலையில் சேர அவர்களைத் தயார்ப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வேலையில் சேர தயார்ப்படுத்தும் திட்டம், விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகளுக்கு வேலை கிடைக்கும் சாத்தியத்தை உயர்த்தும் என்று உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசால் இப்ராஹிம் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
"நல்ல வேலை கிடைக்க தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள இந்த அணுகுமுறை உதவும். இதன்மூலம் வேலை கிடைக்காத விரக்தியில் அவர்கள் மீண்டும் குற்றம் புரியும் பாதையில் செல்லமாட்டார்கள்," என்று திரு ஃபைசால் தெரிவித்தார்.
குறைந்தது 14 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மேம்படுத்தப்பட்ட கல்வி, பயிற்சித் திட்டத்தில் பங்கெடுக்கத் தகுதி பெறுவர்.