தானா மேரா சிறையில் உள்ள கைதி ஒருவரிடம் அங்கிருந்த வேறு இரண்டு கைதிகள் பற்றி சட்டவிரோதமாகத் தகவல்களைப் பகிர்ந்த இரண்டு முன்னாள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
முகமது ஸுல் ஹெல்மி அப்துல் லத்திப், 32, மீது அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும், முகமது ஃபஹத்துல்லா முகமது நோர்டின், 37, எனும் முன்னாள் அதிகாரி மீது அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.
கரீம் முகமது குப்பாய் கான், 35, எனும் கைதியிடம் தகவல்களை அவர்கள் அளித்ததாகக் கூறப்பட்டது. அக்கைதி மீது அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் ஆறு குற்றச்சாட்டுகளும் அச்சுறுத்தல் தொடர்பான ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன.