உள்ளூர் ராப் இசைக்கலைஞர் சுபாஷ் நாயர் மீது, வெவ்வேறு சமய, இனக்குழுக்களுக்கு இடையே பகைமை உணர்வுகளை ஊக்குவிக்க முயன்றதன் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இணையத்தில் இனரீதியான கருத்துகளை வெளிப்படுத்திய ராப் இசைக் காணொளியைத் தயாரித்து வெளியிட்டதற்காக விடுக்கப்பட்டிருந்த நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையை சுபாஷ் மீறினார் என்று போலிசார் முன்னர் கூறினர்.
சீனர்களுக்கும் மற்ற இனத் தவர்க்கும் இடையே பகைமையை ஊக்குவிக்க அக்காணொளி முயன்றதாகக் கூறப்பட்டது.
சுபாஷ் கோவிந்த் பிரபாகர் நாயர் எனும் முழுப்பெயர் கொண்ட சுபாஷ் நாயருக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் குற்றம் புரிந்தால் அந்தக் குற்றத்துடன் சேர்த்து, எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றத்துக்காகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப் படக்கூடும் என்பது அதன் நிபந்தனைகளில் ஒன்று.
ஆனால் தமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை சுபாஷ் மீறினார்.
கடந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி வேறொரு சமூகத்தைப் பற்றி சீனக் கிருஸ்துவர்கள் பதிவிட்ட வெறுக்கத்தக்க கருத்து களுக்கு சுபாஷ் தமது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பதில் கூறியிருந்தார். இதேபோன்ற வெறுக்கத்தக்க கருத்துகளை மலாய் முஸ்லிம்கள் கூறியிருந்தால் அவர்களை அதி காரிகள் வேறுவிதமாக நடத்தியிருப்பார்கள் என்று அவர் கூறினார்.
மேலும், கடந்த 2019இல் ஆர்ச்சர்ட் டவர்சில் நடந்த இந்திய ஆடவர் கொலையில் தொடர்பிருந்த சீனர்களில் ஒருவரிடம், அவரது இனம் காரணமாக போலிசார் கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்று சுபாஷ் கடந்தாண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுபற்றி போலிஸ் விசா ரணை நடந்துகொண்டிருந்த போதே, கடந்த மார்ச் 11ஆம் தேதி, சப்ஸ்டேஷனில் நடைபெற்ற ஒரு நாடகத்தின்போது, அக்டோபர் 15ஆம் தேதி தாம் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட கருத்துகளின் கேளிக்கை சித்திரத்தைக் காண்பித்திருந்தார்.