அரிய வகையைச் சேர்ந்த, அழியக் கூடிய அபாயத்தில் உள்ள 'ஹாக்ஸ்பில்' வகையைச் சேர்ந்த 85 ஆமைக் குஞ்சுகள் நேற்றுக் காலையில் கடலில் விடப்பட்டன.
ஆமைக்குஞ்சுகள் செந்தோசாவில் உள்ள சிலோசோ கடற்கரையில் உள்ள கூட்டிலிருந்து நேற்று முன்தினம் வெளிவந்தன. இவை இயற்கையாகவே பொரித்திருந்தன.
விலங்குக் காப்பக அதிகாரிகள் அவற்றைச் சேகரித்து, அளவிட்டு அவற்றின் உடல்நலனைச் சோதித்தனர். பின்னர் ஆமைக் குஞ்சுகளை நேற்றுக் காலை 6.30 மணிக்கு அவர்கள் செந்தோசாவை ஒட்டிய கடலில் விட்டனர்.
பலவான் கடற்கரையில் குஞ்சு கள் இன்னமும் பொரிக்காத வேறொரு ஆமைக் கூடும் உள்ளது. இரண்டு கூடுகளும் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன.
தென்கிழக்காசியாவில் 'ஹாக்ஸ்பில்' ஆமை வகை அழியும் அபாயத்தில் உள்ளதாகக் கூறினார் கடலாமை சூழலியல் அதிகாரி ருஷன் அப்துல் ரஹமான்.
"நமது கடற்கரைகளில் இந்த ஆமைகள் முட்டையிடுவது ஆறுதலாய் உள்ளது," என்றார் அவர்.
இந்த ஆமைக் கூடுகள் கடைசி யாக செந்தோசாவில் 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.