கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் குணமடைவோரின் கவலைகளை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுடைய கவலை நியாயமானதே என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார். ஆனால் சிறந்த பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் அது பற்றி கவலைப்பட வேண்டிய தில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தில் உள்ள வீட்டில் குணமடைதல் பணிக் குழுவின் தலைமையகத்துக்கு இன்று அதிபர் வருகை யளித்தார்.அப்போது அவர் செய்தியாளர் களிடம் பேசினார்.
“வீட்டில் குணமடைவோரின் கவலைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது,” என்று அதிபர் குறிப்பிட்டார்.
“உங்களுக்குத் தொற்று ஏற்பட்டால் உங்களுக்காக மட்டும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் நீங்கள் கவலைப்படுவீர்கள். உங்களுடைய கவலைகள் நியாயப் படுத்தக்கூடியது, என்றாலும் ஆலோசனை வழங்கியபடி நடைமுறைகளைப் பின்பற்றினால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் குணமடைவதற்கு நல்ல பராமரிப்பு கட்டமைப்பு நடப்பில் உள்ளது,” என்று திருமதி ஹலிமா கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வீட்டில் குணமடைவது முன்னோடித் திட்டமாக அறிமுகமானது. அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டு இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
சிலரால் சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொள்வதில் சிலருக்கு சிரமம் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 29ஆம் தேதி வீட்டில் குணமடைதல் பணிக்குழுவை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் உருவாக்கியது.
அக்டோபர் முடிவில் சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 450 வீரர்கள் இத்திட்டத்தின் பல்வேறு பணிகளில் ஈடு படுத்தப்பட்டனர்.
இவர்களைத் தவிர அரசாங்க தொழில்நுட்ப முகவை, தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவை, மக்கள் கழகம், ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு முகவை, பொதுச் சேவை பிரிவு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கைெகாடுத்தனர்.
இன்று அதிபர் ஹலிமா யாக்கோப், பணிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
குழுவின் நேரடி தொலைபேசி தொடர்பை பராமரிக்கும் முழு நேர தேசிய சேவையாளர்களுடனும் அவர் கலந்துைரயாடினார்.
மருத்துவர்களிடம் இணையம் வழி வழங்கப்படும் மருத்துவ சேவைகளைப் பற்றியும் அவர் அறிந்துகொண்டார். பொதுமக்கள் வீட்டில் குணமடை வதற்காக செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகளையும் அதிபர் ஹலிமா பார்வையிட்டார்.