ஜஸ்டின் லீ மரணத்துக்கான காரணங்களை ஊகிக்க மட்டுமே முடியும். அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று உள்துறை துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டு வந்த 17 வயது ஜஸ்டின் லீ, கைது செய்து, பிணையில் விடுவிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், அந்த இளையருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைந்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இளையரை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்த பிறகு ஜூன் 24ஆம் தேதி இளையர் மீது போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே செப்டம்பர் 16ஆம் தேதி வீட்டுக்கு அருகே உயரத்திலிருந்து விழுந்து ஜஸ்டின் லீ இறந்தார்.
"எட்டு மாத இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது, இது பற்றி சொல்வது சிரமம் என்று நினைக்கிறேன்.
"ஏழு நாட்களில் வழக்கு விசாரணைக்கு வருவது காரணமா, வழக்குப் பற்றி அல்லது தன்னுடைய கவலைகளைப் பற்றி யாரிடமாவது அவர் பேசினாரா, வேறு ஏதாவது பிரச்சினைகள் அவருக்கு இருந்ததா, அவருடைய ரத்தத்தில் போதைப்ெபாருளுக்கான அடையாளம் இருந்தது எப்படி, கீழே விழுவதற்கு முன்பு போதைப் பொருள் உட்கொண்டாரா என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இவற்றுக்கான பதில்களை ஊகிக்க முடியுமே தவிர இதற்கு மேல் செய்வது சிரமம்," என்று அவர் தெரிவித்தார்.
"போதைப் பொருள் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளையர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை எப்போதும் உள்துறை அமைச்சு தனது முதல் தகவலாக முன்வைத்து வருகிறது.
"ஜஸ்டின் விவகாரத்தில் அவர் போதைப் பொருளை கடத்தியிருக்கிறார். போதைப்பொருளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
"ஆனால் சரியான உதவி வழங்கப்பட்டிருந்தால் அவர் மாறியிருக்கலாம். நீதிமன்றம் கையாண்ட பிறகு அவருக்கு வழிகாட்டவும் உதவி வழங்கவும் நமது நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இம் முயற்சியில் குடும்பத்தினரையும் பங்கேற்கச் செய்கிறோம்," என்று கூறிய அமைச்சர் ஃபைசால், அவருக்கு சட்டப்படி பிரதிநிதித்துவம் இருந்ததையும் குடும்பத்தினருடன் வசித்து வந்ததையும் சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான சந்தேக நபர்கள் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளதால் பிணையில் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால் ஜஸ்டின் விவகாரத்தில் அவரது வயது காரணமாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவரை பிணையில் விடுவித்தது என்று மேலும் அவர் சொன்னார்.
பட்டாளிக் கட்சி தலைவரும் அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வியா லிம், வயது குறைந்த இளம் சந்தேக நபர்களை கையாளும் நடைமுறைகளை உள்துறை அமைச்சு பரிசீலிக்கும் திட்டமிருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு, அடிக்கடி நடைமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஃபைசால் தெரிவித்தார்.
2016ல் ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டெனிஸ் புவாவும் 2017ல் சில்வியா லிம்மும் பதினெட்டு வயதுக்கு குறைவான இளையர்கள் அனைவருக்கும் அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது பெரியவர்கள் உடன் இருக்கும் ஆதரவு வழங்கப்படுமா என்று கேட்டிருந்தனர்.
'ஏஏஒய்எஸ்' எனும் திட்டம் 16 வயதுக்கு குறைவான இளம் குற்றவாளிக்கு விசாரணையின்போது பயிற்சி பெற்ற தொண்டூழியர் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாக கூறிய அமைச்சர், இது பற்றிய முடிவு பின்னர் அறிவிக்கப்படவிருக்கிறது என்று சொன்னார்.