ஈசூனில் உள்ள வீவக புளோக்கில் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டு ஐந்து மாடி உயரத்துக்கு பீய்ச்சியடித்தது.
ஈசூன் ஸ்திரீட் 22ல் உள்ள புளோக் 263ல் காலை 6.30 மணிக்கு நீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த பொதுப் பய னீட்டுக் கழகத்தின் ஊழியர்கள் கசிவை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகல் வரை பணி தொடர்ந்த வேளையில் மற்றொரு கசிவும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஈசூன் குடியிருப்பாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் லிம், 49, நேற்று பிற்பகல் கார்ப்பேட்டைக்குச் சென்றபோது தண்ணீர் பீய்ச்சியடிப்பதைக் கண்டதாக தெரிவித்தார்.
தண்ணீர் மேல்நோக்கி பீய்ச்சியடிப்பதைத் தடுக்க பியுபி ஊழியர் ஒருவர் லாரியை தண்ணீர் கசிந்த இடத்துக்கு மேல் நிறுத்தியதாக அவர் சொன்னார். "தண்ணீர் அவ் வளவு வேகமாக பீய்ச்சியடித்தது ஆச்சரியமாக இருந்தது," என்றார் அவர். பழுதுபார்ப்புக்காக தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் சம்பவத்தின்போது ஒரு வீட்டில் மட்டுமே ஆட்கள் இருந்ததாக லியான்ஹ வான்பாவ் நாளேடு தெரிவித்தது.