உலக இணைய நாணயப் பொருளியலில் முன்னணி நாடாகத் திகழ சிங்கப்பூர் விரும்புவதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நிதித் துறையில் இணைய நாணயம் தொடர்பான தொழில்துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், அந்த வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொண்டு பலன் அடைய உலகம் முழுவதையும் சேர்ந்த நிதி மையங்கள் வேகமாக முயற்சிகளை எடுத்து வருகின்றன என்று அவர் கூறினார்.
இத்தகைய சூழலில் இணைய நாணயப் பொருளியலை முடக்கி விடுவது விவேகமானதாக இருக்காது என்று திரு மேனன் தெரிவித்தார்.
அப்படி இருந்து விடுவதற்குப் பதிலாக சிங்கப்பூர் நாணய ஆணையம் வலுவான ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது.
அந்த ஒழுங்குமுறை நிபந்தனைகளை நிறைவேற்றுகின்ற பல்வேறு ஆபத்துகளைச் சமாளிக்க ஆற்றல் பெற்றுள்ள நிறுவனங்கள் செயல்பட இயலும் என்று அவர் கூறினார்.
இணைய நாணயத்தைக் கையாளுவது என்று வரும்போது பல நாடுகளும் பலவிதமாக செயல்படுகின்றன என்றாரவர்.
இணைய நாணய நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அவை ஒளிமயமான எதிர்காலத்தை உத்தேசித்து செய்யப்படும் ஒரு முதலீடு என்றும் இன்றைய நிலையில் அதன் வடிவம் தெளிவாக இல்லை என்றும் திரு மேனன் குறிப்பிட்டார்.

