கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2018 முதல் குறைந்து வருகிறது. கடந்த 2018ல் அத்தகைய 776 விபத்துகள் நிகழ்ந்தன.
இந்த எண்ணிக்கை, 2019ல் 690 ஆகவும் சென்ற ஆண்டு 426 ஆகவும் இந்த ஆண்டு ஜூன் வாக்கில் 268 ஆகவும் குறைந்து வந்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ராடின் மாஸ் தொகுதி உறுப்பினர் மெல்வின் யோங்கிற்குப் பதிலளித்து பேசிய அவர், அத்தகைய விபத்துகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களில் எத்தனை வாகனங்கள் ஊழியர்களை ஏற்றிச் செல்கின்றன என்பதை போக்குவரத்து போலிஸ் கண்காணிப்பதில்லை என்று குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலிஸ் பலவற்றையும் தொடர்ந்து போதித்து வருகிறது என்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் தெரிவித்தார்.