பக்கத்தில் உறங்குபவர் இடைவிடாது குறட்டை விடுவதால் உங்களது தூக்கம் பாதிக்கப்படுகிறதா? இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குபவர் நீங்கள் மட்டும் அல்லர்.
தூக்கத்தில் குறட்டை விடுபவர்கள் என வரும்போது, உலக அளவில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இருப்பதாக பிரிட்டிஷ் படுக்கை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில், கூகல் தேடுதளத்தில் குறட்டை விடுதல் சம்பந்தப்பட்ட 50 சொற்கள் அதிகம் தேடப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நகரிலும் 1,000 பேருக்கு எத்தனை முறை அந்தச் சொற்கள் தேடப்பட்டன என்பது கணக்கிடப்பட்டது.
கடந்த ஓராண்டில், குறட்டை விடுதல் குறித்து சிங்கப்பூரில் 139,070 முறை இணையத்தில் தகவல் தேடப்பட்டதாக 'ஸ்லீப்சீக்கர்' எனும் அந்த பிரிட்டிஷ் நிறுவனம் கண்டறிந்தது. இங்கு ஆயிரம் குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தேடும் விகிதம் 24ஆக உள்ளது.
குறட்டை விடுவதில், தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்நகரின் மக்கள்தொகை 1.2 மில்லியன். குறட்டை விடுதல் தொடர்பில் அங்கு 45,510 முறை தகவல் தேடப்பட்டது. ஆயிரம் குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தேடும் விகிதம் 37.9ஆக உள்ளது.
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவிலும் மக்களுக்கு நன்கு உறக்கம் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்நகரில் ஏறத்தாழ 447,000 பேர் வசிக்கின்றனர். தரவரிசையில் இரண்டாம் இடத்தை அந்நகர் பிடித்துள்ளது. குறட்டை விடுதல் பற்றி அங்கு 14,580 முறை தகவல் தேடப்பட்டது. ஆயிரம் குடியிருப்பாளர்களுக்குத் தகவல் தேடும் விகிதம் 32.6ஆக உள்ளது.
வெலிங்டன், லண்டன், ஒட்டாவா, கிங்ஸ்டன், கேப் டவுன், வாஷிங்டன் டிசி ஆகிய நகர்கள் அடுத்தடுத்த நிலைகளில் வந்தன.


