வசதி குறைந்தோருக்குக் கைகொடுத்த ஆலயம்

வசதி குறைந்தோருக்குக் கைகொடுத்த ஆலயம்

1 mins read
3a9e0c3a-5c3f-4cfe-b21e-46548a7f80bc
-

தீபாவளி உணர்வின் பேரில் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 20 வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பலகாரங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியது. ஆலயத்திலிருந்து பைகளைத் தொண்டூழியர்கள், கொடையாளிகளுக்கு விநியோகம் செய்தனர்.

உள்துறை மற்றும் தேசிய மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். "புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம், புரோஜெக்ட் பென்சில், இந்திய முஸ்லிம் சமூகச் சேவை சங்கம், அடித்தள அமைஙப்புகள், பித்ரா ஆகிய அமைப்புகளுடன் நான் கடந்த வாரம் இணைந்துகொண்டேன். இந்த அமைப்புகளுக்கிடையே கம்பத்து உணர்வு வலுவாக இருப்பதைக் கண்டு நெகிழ்கிறேன். வசதி குறைந்த குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் திட்டங்களை உருவாக்க சமூகமே திரள்வதை மேலும் காண விரும்புகிறேன்," என்று கூறிய இணைப் பேராசிரியர் பைஷல் , இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறுவதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்குத் தொடர விரும்புவதாகக் கூறிய ஆலயச் செயலாளர் திரு இ. நாராயணசாமி, குற்றவாளிகளின் குடும்பங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார். "குடும்பத்தில் ஒருவர் சிறை செல்லும்போது அவரது குடும்பத்தினர் பெரிதும் பாதிப்படைகின்றனர். வசதி குறைந்த குடும்பங்களுடன் இத்தகைய குடும்பங்களுக்கும் கைகொடுக்க ஆலயத்தினராக நாங்கள் விரும்பினோம். உள்துறை அமைச்சுடன் சேர்ந்து இதனைச் செய்ததில் எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி," என்று அவர் கூறினார்.