தஞ்சோங் பகார் வட்டாரத்தில் இருக்கும் தகுதிபெறும் 527 புளோக்குகளில் வரும் 2025ஆம் ஆண்டுக்கு சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் தகடுச் சாதனங்கள் பொருத்தப் படும்.
சாதனங்கள் பொருத்தப்பட்ட பின்னர், அந்த புளோக்குகளில் உள்ள பொது இடங்களில் எரி சக்தி பயன்பாடு நிகர பூஜ்ஜியத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இத்திட்டம் எரிவாயு செயலாற்றலை அதிகரிக்கும் தஞ்சோங் பகார் நகரமன்றத்தின் பத்தாண்டு பெருந்திட்டத்தின் ஒரு பகுதி யாகும். நகரமன்றம் இந்த ஆண்டுக்கான தனது நீடித்த நிலைத்தன்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதில் பத்தாண்டு பெருந்திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், வரும் 2030க்குள் பொது இடங்களில் 15% குறைவான எரிசக்தியைப் பயன்படுத்த நகரமன்றம் திட்டமிடுகிறது.
அதற்கு எரிசக்தியைச் சேமிக்கும் மின்தூக்கிகள் பயன்படுத்தப்படும். அத்துடன் அறிவார்ந்த எல்இடி விளக்குகளைப் பயன் படுத்த முடியுமா என்றும் அது சோதித்து வருகிறது.
மேலும் கழிவுகள் அற்ற நிலையை அடையும் முயற்சியிலும் தஞ்சோங் பகார் நகரமன்றம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு, செடிகொடிகளையும் உணவுக் கழிவு களையும் உரமாக மாற்றுவது திட்டமாகும்.