ப. பாலசுப்பிரமணியம்
பொதுவாக 16 வயது இளையர்கள் தங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வதிலும் கல்வி கற்பதிலும் அதிக நேரத்தை செலவழிப்பர்.
ஆனால் காயத்ரி உணவகத்தின் உரிமையாளரான திரு சண்முகம் கணேசனின் மூத்த மகன் திரு ச. மகேந்திரன், அந்த இளம் வயதில் பள்ளி முடிந்ததும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறு கட்டணம் செலுத்தும் இயந்திரத்தை இயக்குவது போன்ற தொழில்நுட்ப உத்திகளைத் தமது ஊழியர்களுக்குக் கற்றுத் தந்தார்.
குடும்பத் தொழில் என்பதால் காயத்ரி உணவக நிர்வாகத்தில் அவர் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
"தந்தையின் தொழில் கற்பித்தல் முறை சற்று வித்தியாசமானது. சிக்கலான பிரச்சினைகளுக்குச் சொந்தமாகத் தீர்வுகாணும்படி
சொல்லிவிடுவார்.
"ஆனால் ஆலோசனை வழங்கவும் தயாராக இருப்பார். உதாரணத்திற்கு, எதிர்பாராத வகையில் திருமண விழா ஒன்றுக்குக் கூடுதல் விருந்தினர்கள் வர, உடனடியாக 200 பேருக்குச் சாப்பாடு சமைக்க ஏற்பாடு செய்வது போன்ற சூழ்நிலையை 17 வயதிலேயே எதிர்கொள்ள வேண்டியநிலை எனக்கு ஏற்பட்டது," என்று தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை 32 வயது திரு மகேந்திரன் நினைவுகூர்ந்தார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் 'கேட்டரிங்' எனப்படும் உணவு சமைத்து அனுப்பும் பிரிவில் பணியாற்றிவிட்டு, தேசிய சேவைக்குப் பிறகு பிரசித்தி பெற்ற சுவிட்சர்லாந்தின் லெ ரோஷ் (Les Roches)
பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாத்தில் பட்டயக்கல்வியையும் வர்த்தக நிர்வாகப் பட்டப்படிப்பை யும் அவர் மேற்கொண்டார்.
சிங்கப்பூர் திரும்பியதும், 'கேட்டரிங் சொல்யூஷன்ஸ்' எனும் நிறுவனத்தின் பெயரில் உணவு சமைத்து, 'பென்டோ செட்'டுகளில் வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
இதற்கிடையே, மளிகைக் கடை, துப்புரவுச் சேவை நிறுவனம் ஆகியவற்றையும் தொடங்கி அவரது குடும்ப வர்த்தகம் விருத்தி அடைந்தது. அவற்றிலும் திரு மகேந்திரனின் பங்களிப்பு இருந்தது.
திரு மகேந்திரனின் இரு தம்பிகளான 30 வயது ச. விக்னேஸ்வரன், 24 வயது ச. கபிலன் ஆகியோரும் குடும்பத் தொழிலில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின் போது தெலுக் ஆயர் சாலையில் இயங்கிய காயத்ரி உணவகத்தை 'போட்டம்ஸ் அப்' எனும் பிஸ்ட்ரோ உணவகமாக மாற்ற இவர்கள் கொடுத்த ஆலோசனைக்கு அமோக ஆதரவுக்கு கிடைத்தது.
அதன் வெற்றியைத் தொடர்ந்து மற்றொரு கிளை கிளமெண்டி
பகுதியில் திறக்கப்பட்டது. சகோ
தரர்கள் மூவரும் பல மின்னிலக்க அம்சங்களைத் தங்கள் வர்த்தகத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
வெவ்வேறு மென்பொருள் பயன்பாடு, விளம்பர உத்திகளில் மின்னிலக்க விளம்பரங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
"கொவிட்-19 நெருக்கடிநிலையால் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. எத்தகைய சவாலையும் துணிந்து எதிர்கொள்ளும் பக்குவம் எங்களுக்கு ஏற்பட உதவிய எங்கள் தந்தைக்கு நன்றிகூறக்
கடமைப்பட்டிருக்கிறோம்," என்றார் திரு மகேந்திரன்.
உணவுத் துறை சார்ந்த தொழில்கள், வேறு தொழில்கள் என 11 தொழில்களை இக்குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி, புதிய துறைகளிலும் முத்திரை பதிக்க சகோதரர்கள் கடப்பாடு கொண்டுள்ளனர்.

